தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்


தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 April 2017 11:15 PM GMT (Updated: 29 April 2017 7:02 PM GMT)

தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்ச

கள்ளக்குறிச்சி நகராட்சி 1–வது வார்டு மிளகாய் தோட்டம் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மிளகாய் தோட்டம் பகுதியிலும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் கடந்த ஒரு வாரமாக பொது மக்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் நேற்று காலை 7.30 மணி அளவில் கள்ளக்குறிச்சி– கச்சிராயப்பாளையம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் லட்சுமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொது மக்கள், தங்கள் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் நாங்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்றும், விவசாய நிலங்களுக்கு சென்றும் தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு நகராட்சி ஆணையாளர் லட்சுமி, குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதை ஏற்ற பொது மக்கள் காலை 8 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story