விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 15,012 பேர் எழுதினார்கள்: கலெக்டர் ஆய்வு


விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை 15,012 பேர் எழுதினார்கள்: கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 29 April 2017 7:02 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வை 15 ஆயிரத்து 12 பேர் எழுதினார்கள். இதை கலெக்டர் சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

விழுப்புரம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் 1 முதல் 8–ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இந்த தேர்வை பிளஸ்–2 மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான தாள்–1 என்றும், பி.எட். முடித்தவர்களுக்காக தாள்–2 என்றும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு 2 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஆசிரியர் தகுதி தாள்–1 தேர்வு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வு 39 மையங்களில் நடந்தது. தேர்வை எழுதுவதற்காக 15 ஆயிரத்து 543 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

15,012 பேர் எழுதினர்

இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 531 பேர் தேர்வு எழுத வரவில்லை. 15 ஆயிரத்து 12 பேர் ஆர்வமுடன் வந்திருந்து தேர்வு எழுதினார்கள். இவர்களில் 350 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் தேர்வு மைய தரைத்தளத்தில் தனியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த தேர்வில் ஏதேனும் முறைகேடு நடைபெறாமல் இருக்க கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை சேர்ந்த 400 பறக்கும் படை குழுவினர் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தேர்வையொட்டி அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேர்வர்கள் எளிதாக செல்லும் வகையில் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது தேர்வு மையத்தில் குடிநீர், கழிவறை வசதி மற்றும் காற்றோட்டமான வசதி உள்ளதா? என்றும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், வருவாய் கோட்டாட்சியர் ஜீனத்பானு, தாசில்தார் பத்மா, வருவாய் ஆய்வாளர் சாதிக், கிராம நிர்வாக அலுவலர் சைலஜா ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) 81 மையங்களில் ஆசிரியர் தகுதி தாள்–2 தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 29 ஆயிரத்து 810 பேர் எழுத உள்ளனர்.


Next Story