பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் ‘திடீர்’ தீ; நோயாளிகள் பத்திரமாக மீட்பு போலீஸ் ஏட்டுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு


பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் ‘திடீர்’ தீ; நோயாளிகள் பத்திரமாக மீட்பு போலீஸ் ஏட்டுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 April 2017 9:30 PM GMT (Updated: 29 April 2017 7:10 PM GMT)

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் திடீரென்று தீப்பிடித்தது. இதைதொடர்ந்து நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் திடீரென்று தீப்பிடித்தது. இதைதொடர்ந்து நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் தீ

பெங்களூரு பேலஸ் குட்டதஹள்ளியில் 4 மாடி கட்டிடத்தில் தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மருத்துவமனையின் 2–வது மாடியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வயாலிகாவல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். அதனைத்தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை அவர்களால் அணைக்க முடியவில்லை.

போலீஸ் ஏட்டுக்கு மூச்சுத்திணறல்

இதையடுத்து, மேலும் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தீ விபத்தில் மருத்துவமனையின் 2–வது மாடி கட்டிடத்தில் இருந்த மருத்துவ உபகரணங்கள் கருகி நாசமானது.

முன்னதாக, மீட்பு பணியின்போது போலீஸ் ஏட்டு தனஞ்செயாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மீட்கப்பட்ட நோயாளிகள் மற்றும் போலீஸ் ஏட்டு தனஞ்செயா ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் இன்னொரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, வயாலிகாவல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தீவிபத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story