கோபி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


கோபி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-30T00:42:59+05:30)

கோபி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடத்தூர்

கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி தேவேந்திரபுரம், அரசூர். இந்த பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு பவானி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இங்குள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு அரசூருக்கு நேற்று காலை 9 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள ஈரோடு–சத்தி ரோட்டில் காலிக்குடங்களுடன் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் புகழேந்தி, கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் மற்றும் கடத்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகிறோம். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு 10 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியல் போராட்டம் காரணமாக ஈரோடு–சத்தி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story