போதைப்பொருள் விற்க முயற்சி நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது ரூ.1¼ லட்சம் பொருட்கள் பறிமுதல்


போதைப்பொருள் விற்க முயற்சி நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது ரூ.1¼ லட்சம் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2017 8:30 PM GMT (Updated: 2017-04-30T00:52:15+05:30)

பெங்களூருவில், போதைப்பொருள் விற்க முயற்சித்ததாக நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், போதைப்பொருள் விற்க முயற்சித்ததாக நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2 பேர் கைது

பெங்களூரு மாருதிநகர் அருகே கோகிலு மெயின் ரோட்டில் உள்ள கொண்டப்பா லே–அவுட்டில் இருக்கும் ஒரு வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்ய முயற்சிப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது, வீட்டில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, வீட்டில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்த சுக்உனோன்சோ (வயது 41), பிரங் ஆன்இடிகசி (34) என்பதும், அவர்கள் போதைப்பொருள் பதுக்கி விற்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல்

மேலும், போதைப்பொருள் விற்பனை செய்ததாக ஏற்கனவே பிரங் ஆன்இடிகசி கைதாகி ஜாமீனில் வெளியே வந்ததும், போதைப்பொருள் விற்ற வழக்கில் சுக்உனோன்சோ தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. தற்போது மீண்டும் போதைப்பொருள் விற்க முயன்றதாக இருவரும் போலீசில் சிக்கியதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் 2 பேரும் ‘விசா‘ காலம் முடிவடைந்ததால் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

கைதானவர்களிடம் இருந்து 6.10 கிராம் கோகைன் போதைப்பொருள், 4 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1¼ லட்சம் இருக்கும் என போலீசார் கூறினார்கள். இதுகுறித்து, எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story