ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


ஊத்துக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 April 2017 7:36 PM GMT (Updated: 29 April 2017 7:35 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் ஊராட்சிக்கு பெரிஞ்சேரி ஏரி பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குழாய்கள் மூலம் மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு, அங்கிருந்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏரி பகுதியில் உள்ள மதகுகளை சீர் செய்யும் போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் உடைந்து போனதால் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதன்பின்னர் அதிகாரிகள் குடிநீர் குழாய்களை தற்காலிகமாக சீர் செய்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த குழாய்கள் மீண்டும் உடைந்து போனதால் கட்சூரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் கிராம பொதுமக்கள் தொலை தூரத்தில் இருந்து குடங்களில் தண்ணீர் சுமந்து வருகின்றனர். இது குறித்து கிராம பொதுமக்கள் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதை கண்டித்தும், தங்களுக்கு குடிநீர் கேட்டும் கட்சூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொது மக்கள் ஊத்துக்கோட்டை– திருவள்ளூர் மெயின் ரோட்டில் நேற்று காலை காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்க நடவடிக்கை

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, துணை தாசில்தார் கதிர்வேலு, துணை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகு, இன்ஸ்பெக்டர் பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து விரைவில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.  

இதன் காரணமாக ஊத்துக்கோட்டை–திருவள்ளூர் இடையே 45 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story