கொடைக்கானலில் மலர்க்கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா


கொடைக்கானலில் மலர்க்கண்காட்சிக்கு தயாராகும் பிரையண்ட் பூங்கா
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 29 April 2017 7:46 PM GMT)

கொடைக்கானலில் மலர்க்கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது. சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்ப்பது கொடைக்கானலின் மையப்பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்கா ஆகும். தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் ஆண்டு முழுவதும் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்கும். அவற்றை ரசிப்பதற்காகவே பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.

இந்த பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டங்களாக மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதம் முதல் பூங்காவில் நடவு செய்யப்பட்டிருந்த 40 வகையான மலர்ச்செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்க தொடங்கின.

ரோஜா மலர்கள்

இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக டெய்சி, டெல்பீனியம், டையான்தாஸ், கிளாடியஸ், பிளாக்ஸ், சால்வியா, பெல்கோணியம், பால்சம், செலோசியா, டேலியா, மேரிகோல்டு, ஆந்தூரியம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்தன. இது தவிர அனைத்து தரப்பினரும் விரும்பும் ரோஜா மலர்கள் 10–க்கும் மேற்பட்ட வண்ணங்களில் பூத்து குலுங்கின. இதனை பார்வையிட்டு ரசிப்பதற்காகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் கடந்த சில மாதங்களாக படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

மேலும் பூங்கா முழுவதும் கோடிக்கணக்கில் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் முன்பு நின்று குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக குளு, குளு காலநிலை நிலவியது. இந்த நிலையில் தற்போது சீசனும் தொடங்கியுள்ளதால் பிரையண்ட் பூங்காவில் மலர்க்கண்காட்சிக்கான பணிகள் தொடங்கியுள்ளன. இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில், பூங்காவில் உள்ள அனைத்து மலர்ச்செடிகளும் பூக்கத்தொடங்கியுள்ளன. இதையொட்டி மலர்க்கண்காட்சிக்காக பூங்கா தயாராகி வருகிறது என்றனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முன்னதாக நேற்று காலை முதலே கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினர். இதையடுத்து முக்கிய சுற்றுலா இடங்களில் சுற்றுலா பயணிகள் நிரம்பி வழிந்தனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்தபடியே சென்றன.

இருந்த போதும் போலீசார் விரைவாக செயல்பட்டு வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் தடுத்து போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் தபால்நிலைய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. நகர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டதாலும், குடிநீர் தட்டுப்பாடு காரணமாகவும் குறைந்த அளவிலேயே தங்கும் விடுதிகள் செயல்பட்டன. இதனால் விடுதிகளில் அறை கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தவித்தனர். மேலும் விடுதிகளில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டனர்.


Next Story