தாராபுரத்தில் நாளை தே.மு.தி.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார்


தாராபுரத்தில் நாளை தே.மு.தி.க. சார்பில் மே தின பொதுக்கூட்டம் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார்
x
தினத்தந்தி 29 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-30T01:26:27+05:30)

தாராபுரத்தில் நாளை தே.மு.தி.க. சார்பில் மேதின பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசுகிறார்.

தாராபுரம்,

உழைக்கும் மக்களின் நாளான மேதின தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியிருந்தார். அதன்படி தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாளை (திங்கட்கிழமை) மே தின பொதுக்கூட்டம் தாராபுரத்தில் உள்ள அலங்கியம் சாலையில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நாளை மாலை 4.30 மணிக்கு தாராபுரம் வருகிறார்கள். அவர்களுக்கு தே.மு.தி.க. சார்பில் அலங்கியம் சாலையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட உள்ளது. பின்னர் மேளம் தாளங்கள் முழங்க மேடைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இந்த பொதுக்கூட்டத்திற்கு தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன் தலைமை தாங்குகிறார். பொருளாளர் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி வரவேற்கிறார்.

விஜயகாந்த் பேசுகிறார்

அதை தொடர்ந்து விஜயகாந்த் மற்றும் மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மே தினம் குறித்து தொண்டர்கள் மத்தியில் சிறப்புறையாற்றுகிறார்கள். இதில் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், தே.மு.தி.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தே.மு.தி.க. சார்பில் தாராபுரத்தில் மே தின பொதுக்கூட்டம் நடைபெறுவதால், தாராபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் தே.மு.தி.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன. விஜயகாந்தை வரவேற்க வரவேற்பு வளைவுகள், பேனர்கள், கட்–அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.


Next Story