திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற முன்பதிவு செய்யலாம்


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற முன்பதிவு செய்யலாம்
x
தினத்தந்தி 29 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-30T01:26:28+05:30)

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்தில் மானியம் பெற முன்பதிவு செய்யலாம் என்று கலெக்டர் எஸ்.ஜெயந்தி அறிவித்துள்ளார்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

பருவமழை பொய்த்து விட்டதால் திருப்பூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் நுண்ணீர் பாசன முறைகளான சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டங்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தோட்டக்கலை பயிர்களுக்கு 691.91 எக்டருக்கு ரூ.5 கோடியே 71 லட்சத்து 21 ஆயிரம் அரசு மானியம் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் 773 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டு முதல் நுண்ணீர் பாசன விண்ணப்பங்களை விவசாயிகளே கணிபொறி மூலம் இணைய தளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம். இதற்கு உரிய அரசு ஆணை பெறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தோட்டக்கலை துறையின் மூலமாக 1,030 எக்டர் பரப்பில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் தோட்ட பணியாளர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளான 2 எக்டர் வரை விவசாய நிலமுள்ள விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதன்படி 1 எக்டருக்கு ரூ.1 லட்சம் வரையும், 2 எக்டருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் பயிரினை பொறுத்து மானியம் பெறலாம்.

முன்பதிவு செய்யலாம்

இந்த திட்டத்திற்காக ரூ.6 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களுடைய நில ஆவணங்களான சிட்டா அடங்கல், நில உரிமைச்சான்று, 3 புகைப்படங்கள், நிலவரைபடம், கிணறு மற்றும் ஆழ்குழாய் உள்ளதற்கான சான்று, ரே‌ஷன் கார்டு மற்றும், ஆதார் அட்டை முதலியவற்றை கொண்டு வந்து நேரிலும் முன்பதிவு செய்யலாம். தங்களது விருப்பத்தின் அடிப்படையில் அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நுண்ணீர் பாசன நிறுவனங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம்.

தேவைப்பட்டால் விவசாயிகள் தாமாகவே பதிவு செய்யலாம். அல்லது நுண்ணீர் பாசன நிறுவனம் மூலமாகவோ, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மூலமாக பதிவு செய்யவோ நடப்பு ஆண்டு வாய்ப்புள்ளது. எனவே, நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடி பரப்பினை அதிகரித்து, வருவாயை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story