நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி


நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி
x
தினத்தந்தி 29 April 2017 11:15 PM GMT (Updated: 2017-04-30T01:38:55+05:30)

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி, வன அதிகாரி தகவல்

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வன அதிகாரி கூறினார்.

வனத்துறை நிதியின் கீழ் பழங்குடியின மக்களுக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் கூட்டம் குன்னூர் வனத்துறை விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிக அதிகாரம்

நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். வனத்துறையையும் பழங்குடியின மக்களையும் பிரிக்க முடியாது. பழங்குடியின மக்கள் இல்லையென்றால் வனங்கள் இருக்காது. வன விலங்குகளை பழங்குடியினர் தெய்வமாக வழிபடுவதால் அவைகள் காக்கப்பட்டு வருகின்றன.

வனப்பாதுகாப்பில் மாநில அரசை விட மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது. அதனால்தான் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது.

அகழிகள் அமைத்து தரப்படும்

பழங்குடியின மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் முன்னேறமுடியும். ஆனைப்பள்ளத்தில் பழங்குடியினரின் வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதற்கு அந்த பகுதி மக்கள், அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அரசிடம் சிபாரிசு செய்து நேரடியாக பணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பணம் கிடைத்தவுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். குறைந்த வட்டியில் கடன் உதவி பழங்குடியின மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். யானை தொந்தரவு இருந்தால் அதனை தடுக்க அகழிகள் அமைத்து தரப்படும்.

கணக்கெடுப்பு

2005-ம் ஆண்டிற்கு முன்பு வனப்பகுதி நிலங்களில் வீடுகட்டி விவசாயம் செய்து வருபவர்களின் விவரங்கள் செயற்கை கோள் மூலமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டுக்கு பிறகு, வனப்பகுதியில் ஊடுருவும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வனப்பகுதி நிலங்களுக்கு பட்டா கொடுப்பது இல்லை. லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் ஆகிய சுற்றுலா தலங்களில் மகளிர் சுய உதவி குழுவிற்கு நான்கு கடைகள் ஒதுக்கப்படும். சின்னாளக்கோம்பை, சேம்பக்கரையை சேர்ந்த கிராம இளைஞர்கள் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சில்வர்ஓக் மரக்கன்றுகளை சிறப்பாக பராமரித்து வளர்த்த பெண் விவசாயிகளுக்கு வனத்துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை மாவட்ட வன அலுவலர் கலாநிதி வழங்கினார்.

கூட்டத்தில் கூட்டத்தில் குன்னூர் வனச்சரகர் பெரியசாமி, வனவர்கள் சவுந்திரராஜன், பாலகிருஷ் ணன் மற்றும் வன அலுவலர்கள் மற்றும் பழங்குடியினர்கள் கலந்து கொண்டனர். 

Next Story