கர்நாடக பா.ஜனதாவில் உட்கட்சி மோதல்: அறிக்கை தாக்கல் செய்ய முரளிதரராவுக்கு அமித்ஷா உத்தரவு


கர்நாடக பா.ஜனதாவில் உட்கட்சி மோதல்: அறிக்கை தாக்கல் செய்ய முரளிதரராவுக்கு அமித்ஷா உத்தரவு
x
தினத்தந்தி 29 April 2017 8:30 PM GMT (Updated: 2017-04-30T01:46:43+05:30)

பா.ஜனதாவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முரளிதரராவுக்கு தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு,

பா.ஜனதாவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய முரளிதரராவுக்கு தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநில தலைவர் எடியூரப்பா, ஈசுவரப்பாவிடம் முரளிதரராவ் விசாரிக்க உள்ளார்.

நிர்வாகிகள் நியமனத்தில் மோதல்

பா.ஜனதா மாநில தலைவராக எடியூரப்பா நியமிக்கப்பட்ட பின்பு, அவர் கட்சிக்கு அனைத்து மட்டத்திலும் புதிய நிர்வாகிகளை நியமித்தார். ஆனால் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் எடியூரப்பா தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவும், கர்நாடக ஜனதா கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாகவும் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான ஈசுவரப்பா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மேலும் எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பை ஈசுவரப்பா தொடங்கினார். இதனால் எடியூரப்பாவுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையே உட்கட்சி மோதல் உருவானது.

பின்னர் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, எடியூரப்பாவையும், ஈசுவரப்பாவையும் அழைத்து சமாதானமாக பேசினார். மேலும் சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு சார்பில் நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்ள கூடாது என்று ஈசுவரப்பாவுக்கும், புதிய நிர்வாகிகளை மாற்றி அமைக்கும்படி எடியூரப்பாவுக்கும் அமித்ஷா உத்தரவிட்டு இருந்தார். அதன்பிறகு, சங்கொள்ளி ராயண்ணா பிரிகேட் அமைப்பு சார்பில் நடந்த கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் ஈசுவரப்பா ஒதுங்கி இருந்தார். அதே நேரத்தில் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் சில மாற்றங்களை எடியூரப்பா செய்தார்.

அதிருப்தியாளர்கள் கூட்டம்

ஆனால் புதிய நிர்வாகிகள் நியமனத்தில் எடியூரப்பா மாற்றங்கள் செய்ததில் ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் திருப்தி அடையவில்லை. இதனால் எடியூரப்பாவுக்கும், ஈசுவரப்பாவுக்கும் இடையே மீண்டும் உட்கட்சி மோதல் உருவானது. மேலும் எடியூரப்பாவுக்கு எதிராக கடந்த 27–ந் தேதி அதிருப்தியாளர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈசுவரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கலந்துகொள்ள கூடாது என்று மாநில தலைவர் எடியூரப்பா உத்தரவிட்டு இருந்தார். ஆனால் ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், எடியூரப்பாவுக்கு எதிராக பேசினார்கள்.

இதனால் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈசுவரப்பா ஈடுபட்டு வருவதாக பா.ஜனதாவினர் கூறியதுடன், அவரிடம் இருந்து கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை பறிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதே நேரத்தில் பெங்களூரு, மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் எடியூரப்பா, ஈசுவரப்பா ஆதரவாளர்கள் மோதிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறின.

அமித்ஷா உத்தரவு

இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈசுவரப்பா ஈடுபடுவது பற்றி மேலிட தலைவர்களிடம் புகார் அளிக்க எடியூரப்பா டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை எடியூரப்பாவால் நேற்று சந்திக்க முடியாமல் போனது. இதனால் மற்ற தலைவர்களை சந்தித்து எடியூரப்பா பேசினார். அதே நேரத்தில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈசுவரப்பா ஈடுபட்டு வருவது, அதிருப்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டது குறித்து கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு எடியூரப்பா கொண்டு சென்றார்.

அதைத்தொடர்ந்து, பா.ஜனதாவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் விவகாரம் குறித்து எடியூரப்பா மற்றும் ஈசுவரப்பா ஆதரவாளர்களுடன் விசாரித்தும், அவர்களது கருத்துகளையும் கேட்டும் அறிக்கை தாக்கல் செய்யும்படி கர்நாடக மாநில பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் முரளிதரராவுக்கு தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, பா.ஜனதா உட்கட்சி மோதலை சரிசெய்ய மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் நேற்று இரவு பெங்களூருவுக்கு வந்தார்.

முரளிதரராவ் இன்று விசாரிக்கிறார்

அதே நேரத்தில் டெல்லி சென்றுள்ள மாநில தலைவர் எடியூரப்பாவும் நேற்று மாலையில் பெங்களூருவுக்கு திரும்பினார். இதையடுத்து, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநில தலைவர் எடியூரப்பா, அவரது ஆதரவாளர்களுடனும், ஈசுவரப்பா உள்ளிட்ட அதிருப்தியில் உள்ள தலைவர்களுடனும் முரளிதரராவ் விசாரிக்கவும், கருத்துகளை கேட்கவும் உள்ளார். அதன்பிறகு, அமித்ஷாவிடம் முரளிதரராவ் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.

இதற்கிடையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஈசுவரப்பா மீது மேலிடம் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. எடியூரப்பா, ஈசுவரப்பா மோதல் குறித்து காஷ்மீர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய பின்பு அமித்ஷா முக்கிய முடிவு எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2018) தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதாவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story