அருப்புக்கோட்டை அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மாதமாக சம்பளம் வழங்காததால் போராட்டம்


அருப்புக்கோட்டை அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மாதமாக சம்பளம் வழங்காததால் போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2017 11:15 PM GMT (Updated: 29 April 2017 8:19 PM GMT)

அருப்புக்கோட்டை அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் 4 மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து சாலை மறியலில் இறங்கியவர்கள் ஊராட்சி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை,

கிராமப்பகுதி மக்களின் நலனுக்காக 100 நாள் வேலைத்திட்டம் கொண்டுவரப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் இந்த திட்டம் ஏழை தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஆனால் இந்த பணியாளர்களுக்கு சில மாதங்களாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வேலை வழங்கப்படாததோடு சம்பளமும் வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பிரச்சினை தீராததால் ஆங்காங்கே போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டை அருகிலுள்ள பாலவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக்கண்டித்தும் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் நேற்று வடக்குப்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

முற்றுகை

இந்த போராட்டத்தினால் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜ் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் சாலை மறியலை கைவிட்டனர். ஆனாலும் அனைவரும் பாலவநத்தம் ஊராட்சி அலுவலகம் சென்று அங்கு முற்றுகையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அதிகாரி மாரியம்மாள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார்.

Next Story