ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 18-வது நாளாக போராட்டம்


ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 18-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 29 April 2017 8:41 PM GMT)

ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசலில் பொதுமக்கள் 18-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் கலந்து கொண்டார்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை கண்டித்து நெடுவாசல் கிராம மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே கடந்த 12-ந்தேதி இந்த போராட்டம் தொடங்கியது. இதில் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

18-வது நாளாக போராட்டம்

அதன்படி நேற்று 18-வது நாளாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் திரைப்பட இயக்குனர் பாண்டிராஜ் கலந்து கொண்டு, போராட்டக்காரர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு அறிவித்த நாளில் இருந்து, நெடுவாசல் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை காப்பாற்றிக்கொள்ள பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த மக்களை சமூக விரோதிகள் என்று சிலர் கூறியுள்ளனர். அப்படி கூறுபவர்கள் சென்னையில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களுக்கு விவசாயம் குறித்தும், விவசாயிகளின் நிலை குறித்தும் துளிகூட தெரியாது. அவர்கள் ஒருநாள் விவசாயியாக வாழ்ந்து பார்த்தால் தான் விவசாயிகளின் கஷ்டம் அவர்களுக்கு தெரியும்.

தொடர்ந்து போராடுவேன்

மண்ணுக்காகவும், மக்கள் பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்கள் சமூக விரோதிகள் என்றால், நானும் அப்படியே இருந்து விடுகிறேன். நானும் விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்பதால் விவசாயத்தையும், அவர்களது வாழ்க்கையையும் காப்பாற்றுவதற்கு தொடர்ந்து போராடுவேன். மக்களின் நேர்மையான கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, இத்திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story