குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 29 April 2017 11:00 PM GMT (Updated: 29 April 2017 8:41 PM GMT)

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பன்னபட்டி ஊராட்சி, கீழஈச்சம்பட்டியில் கடந்த ஒரு மாதமாக முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாத நிலையில் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் தினமும் தண்ணீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த மன வேதனைக்கு ஆளான கிராம மக்கள் இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை காவல்காரன்பட்டி- இளங்காகுறிச்சி சாலையில் கீழஈச்சம்பட்டி அருகே கிராம மக்கள் காலிக்குடங்களுடன் அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்களை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்ததால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வாக்குவாதம்

மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு பணிக்கு போலீசார் சென்று விட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடைபெறாததால் மறியல் போராட்டம் தொடர்ந்தது. பின்னர் மறியல் குறித்து தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, முதலில் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். பின்னர் நிரந்தரமாக தடையின்றி குடிநீர் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story