தாம்பரம் அருகே நள்ளிரவில் கால் டாக்சி டிரைவரை வெட்டி செல்போன் பறிப்பு


தாம்பரம் அருகே நள்ளிரவில் கால் டாக்சி டிரைவரை வெட்டி செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 29 April 2017 11:54 PM GMT (Updated: 2017-04-30T05:24:21+05:30)

தாம்பரம் அருகே நள்ளிரவில் முகவரி கேட்பது போல நடித்து கால் டாக்சி டிரைவரை அரிவாளால் வெட்டி செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

தாம்பரம்,

சென்னை கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரம், 3-வது பிரதான சாலையை சேர்ந்தவர் கணேசன். அவரது மகன் சிவா (வயது 28). கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, 2.30 மணிக்கு, சிட்லபாக்கம் பகுதிக்கு சவாரிக்காக காரில் சென்றார்.

சிட்லபாக்கம், சீனிவாசா நாயுடு தெருவில் அவரது கார் சென்றபோது, முகவரி கேட்பது போல் 2 பேர் அவரது காரை நிறுத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் சிவாவிடம் முகவரி தொடர்பாக பேச்சு கொடுத்தனர். அதற்கு பதிலளித்த டிரைவர் சிவா, காருடன் சவாரியை அழைப்பதற்காக சென்றார்.

அரிவாள் வெட்டு

பின்னர் அதே பகுதிக்கு வந்த முகவரி கேட்ட நபர்கள் 2 பேரும், காரில் இருந்து டிரைவர் சிவாவை இறங்குமாறு கூறி உள்ளனர். அதைத்தொடர்ந்து கீழே இறங்கிய சிவாவை மர்மநபர்கள் 2 பேரும் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பினர். இதில் டிரைவர் சிவாவிற்கு தலை, கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சிட்லபாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

Next Story