மனிதர்களுக்கும் ஒரு ‘கூடு’!


மனிதர்களுக்கும் ஒரு ‘கூடு’!
x
தினத்தந்தி 30 April 2017 8:26 AM GMT (Updated: 30 April 2017 8:26 AM GMT)

ஒருவர் மட்டுமே படுத்துக்கொள்ளக்கூடிய குட்டிக் குட்டி அறைகளுடன் (?) கூடிய ஓட்டல் நாட்டிலேயே முதல்முறையாக மும்பையில் திறக்கப்பட்டிருக்கிறது. ‘

ருவர் மட்டுமே படுத்துக்கொள்ளக்கூடிய குட்டிக் குட்டி அறைகளுடன் (?) கூடிய ஓட்டல் நாட்டிலேயே முதல்முறையாக மும்பையில் திறக்கப்பட்டிருக்கிறது. ‘கேப்சூல் ஓட்டல்’ எனப்படும் இதை, ‘அடுத்த தலைமுறைக்கான அசத்தல் ஓட்டல்’ என்கிறார்கள், இதைத் தொடங்கியவர்கள்.

மும்பை அந்தேரி கிழக்கில் கம்பீரமாக எழுந்துநிற்கும் ஒரு நவீன கட்டிடத்தின் முதல் தளத்தில் இந்த ஓட்டல் அமைக்கப்பட்டிருக் கிறது. அழகான ரிசப்ஷன், அதைத் தொடர்ந்து ‘பளிச்’சென்று ஈர்க்கும் காபி ஷாப், அதன் பின் 140 பெரிய சைஸ் பொந்துகளைப் போன்ற அறைகள்.

இங்குள்ள இந்தக் குட்டிக் குட்டி அறைகள், 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. முதல் பிரிவில் ‘கிளாசிக் பாட்’ என்ற பெயரில் பெண்களுக்கு மட்டுமேயான 18 குட்டி அறைகள், 3 குளியலறைகள், கழிவறைகள், அடுத்து இதே போன்ற அமைப்பில் 106 குட்டி அறைகள், இவற்றில் ஆண்கள், பெண்கள் இரு பிரி வினருமே தங்கிக்கொள்ளலாம். தனிமை விரும்பிகளுக்காக, பிற அறைகளில் இருந்து தள்ளித் தள்ளி 6 அறைகள், ஜோடியாக தங்க விரும்புபவர்களுக் காக 10 ‘சூட்’கள்.

மேலே ஓர் அறை, கீழே ஓர் அறை என்று இரட்டை அடுக்கில் பிளாஸ்டிக்கால் வடிவமைக் கப்பட்டிருக்கும் இந்த அறைகளை முதன்முதலில் பார்க்கும்போது, பதுங்கு குழி படுக்கைகளைப் போலத் தோன்றுகின்றன.

ஆனால் நமக்கு கொடுக்கப்படும் ‘கீ கார்டின்’ மூலம் திறந்து உள்ளே புகுந்ததும்தான் இதன் சொகுசு புரிகிறது. ஒரு ஸ்லீப்பர் பஸ் படுக்கையின் நவீன வடிவம் போல ஒவ்வோர் அறையும் இருக்கிறது.

நமக்கு இந்த குட்டிக் குட்டி அறை ஓட்டல் புதியது என்றாலும், உலகத்துக்கு கொஞ்சம் பழையதுதான். 1970-ம் ஆண்டுகளிலேயே ஜப்பானில் இம்மாதிரியான கேப்சூல் ஓட்டல்கள் திறக்கப்பட்டுவிட்டன.

எழுந்து நிற்க முடியாது, அமர்ந்துகொள்ளலாம், வசதியாக கையை, காலை நீட்டி மட்டுமே படுக்க முடியும் என்றாலும், இந்தக் குட்டி அறைகளில் உள்ள வசதிகள் அபாரம். படுத்ததும் உள்வாங்கிக்கொள்ளும் மெத்து மெத்தென்ற மெத்தை, ஒரு தனிப்பட்ட ‘லாக்கர்’, ஹெட்போனுடன் டி.வி., படிப்பதற்கான விளக்கு, பவர் சாக்கெட், ஹேங்கர்கள், அலங்கார கண்ணாடி, இலவச ‘வை-பை’, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏர்கண்டிஷன் என்று வசதிகள் தாராளம்.

இந்த அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டால், உங்களுக்கான தனி உலகமாகிவிடும். அமைதியாக புத்தகம் படிக்கலாம், டி.வி. அல்லது லேப்டாப் பார்க்கலாம் அல்லது நிம்மதியாகத் தூங்கலாம். ஒரே விஷயம், குளியலறை, கழிப்பறைக்குத்தான் கொஞ்சம் போட்டியாக இருக்கும். காரணம், 8 அறைகளுக்கு ஒரு குளியலறை, கழிப்பறை என்ற வீதத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தம் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த ஓட்டல், கடந்த மார்ச் மாதம்தான் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

இந்த ஓட்டலின் இயக்குநரும் இணை நிறுவனருமான ஹிரேன் காந்தி, “எங்கள் ஓட்டலில் தங்குவதற்கு நிறைய தொலைபேசி விசாரிப்புகள் வருகின்றன. பல நிறுவனங்களும்கூட தங்கள் ஊழியர்களை இங்கே தங்கவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன” என்கிறார்.

இவரது நண்பரும், மற்றொரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான ஷலாப் மிட்டல்தான் இந்த கேப்சூல் ஓட்டல் தொடக்கத்தின் பின்னணி.

இரண்டாண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் இதுபோன்ற ஓர் ஓட்டலில் தங்கியபோது, இந்தியாவிலும் இம்மாதிரி தொடங்கினால் என்ன என்று எண்ணியிருக்கிறார்.

இந்தியாவில் இந்த முதல் முயற்சிக்கு, ஓட்டல் தொழிலில் அனுபவம் உள்ள நண்பர் காந்தியுடன் கரம் கோர்த்திருக்கிறார் ஷலாப். குஜராத்தில் ஏற்கனவே 3 நான்கு நட்சத்திர ஓட்டல்களை காந்தி நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்சூல் ஓட்டல்கள் பிரபலமாக உள்ள சீனா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் காந்தியும், ஷலாப்பும் முறையாக ஆய்வு நடத்தினர்.

2000-ம் ஆண்டின் இறுதிவாக்கில், உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் போது ஜப்பானில் குறைவான சம்பளத்தில் வேலை பெற்றவர்கள் அல்லது வேலை இழந்தவர்கள், இதுபோன்ற கேப்சூல் ஓட்டல் அறைகளைத்தான் தஞ்சம் அடைந்துள்ளனர். அவற்றில், மாத வாடகைக்குத் தங்கியுள்ளனர்.

ஆனால் இந்தியாவில் தாங்கள் இலக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் வேறு என்கின்றனர், காந்தியும் ஷலாப்பும். அதாவது, தங்குவதற்குச் சின்ன இடம் இருந்தாலும் போதும் என்று எண்ணும் இளம் பயணிகள், பயணித்துக் கொண்டே இருக்கும் வியாபாரிகள், அடிக்கடி பயணிக்கும், ஆனால் நட்சத்திர ஓட்டலின் அனைத்து வசதிகளும் தேவையில்லை என்று கருதும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் ஆகியோர்தான் தங்களின் குறி என்கிறார்கள்.

வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவிலும் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பிறகுதான் இம்முயற்சியில் இந்த நண்பர்கள் இறங்கியிருக்கின்றனர்.

“எல்லோருக்குமே பெரிய ஓட்டல்களில் தங்குவதற்கும், அங்கு தங்களுக்குத் தேவையில்லாத வசதிகளுக்கும் சேர்த்து அதிக வாடகை கொடுப்பதற்கும் விருப்பமில்லை என்பதும், சில வசதிகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வாடகை குறைந்தால் போதும் என்று எண்ணுவதும் எங்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் நாங்கள் வாடகைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சுத்தம், சுகாதாரத்திலும், பராமரிப்பிலும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை” என்கின்றனர்.

இட நெருக்கடி மிகுந்த பெருநகரங்களுக்கு இந்த ‘கான்செப்ட்’ பொருத்தமாக இருக்கும் என்று கருதும் இந்த இணை, விரை விலேயே இந்தியாவின் பிற மெட்ரோ நகரங்களில் இதுபோன்ற ஓட்டல்களைத் திறக்க எண்ணியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

நாளை நாமும் இதுபோன்ற ஒரு ‘கூட்டுக்குள்’ தங்கலாம்... இல்லையில்லை, பதுங்கலாம்!

இந்த ஓட்டலில், 7 அடி நீளம் 4 அடி அகலம், 3 அடி உயரம் உள்ள கூடு அறை ஒன்றின் ஓரிரவு வாடகை ரூ. 2 ஆயிரம்.

ஒரு ‘பட்ஜெட்’ பயணிக்கு இதுவும் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும்கூட இதை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இருக்கிறது. மும்பை போன்ற பெருநகரின் விண்ணை முட்டும் ஓட்டல் வாடகையையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

Next Story