தந்தையிடம் இருந்து கற்றதும் .. பெற்றதும்.. ஜனாதிபதியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி மனந்திறக்கிறார்


தந்தையிடம் இருந்து கற்றதும் .. பெற்றதும்.. ஜனாதிபதியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி மனந்திறக்கிறார்
x
தினத்தந்தி 30 April 2017 8:51 AM GMT (Updated: 2017-04-30T14:21:34+05:30)

தந்தை மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிக அடக்கமான வாழ்க்கை வாழ்கிறார், ஷர்மிஸ்தா முகர்ஜி.

ந்தை மிக உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிக அடக்கமான வாழ்க்கை வாழ்கிறார், ஷர்மிஸ்தா முகர்ஜி. கதக் நடனக் கலைஞர், வளரும் இளம் அரசியல்வாதி என்று தனக்கென ஒரு தனித்தடத்தில் பயணிக்கிறார்.

சரி, யார் இந்த ஷர்மிஸ்தா முகர்ஜி என்கிறீர்களா?

நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் புதல்வி!

தந்தையின் புகழ் வெளிச்சத்துக்கு வெளியிலேயே இருக்க விரும்பும் ஷர்மிஸ்தா, அப்பாவுடன் ஜனாதிபதி மாளிகையில் கூட குடியேற மறுத்து விட்டவர்.

‘பேஸ்புக்’கில் தனக்கு ஆபாச கமெண்ட்களை அனுப்பியவரின் முகத்திரையைக் கிழிக்க ஷர்மிஸ்தா வெளிப்படையாகக் கள மிறங்கிய போது தான் பலரும் இவரை அறிந்தார்கள்.

ஷர்மிஸ்தாவின் பேட்டி:

அந்த ‘பேஸ்புக்’ சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?

“நான் அப்போது வீட்டில் ‘பேஸ்புக்’ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒரு புதியவர் எனக்கு மோசமான மெசேஜ்களை அனுப்ப ஆரம்பித்தார். அது உடல்ரீதியான அத்துமீறல் போல, யாரோ எனது அந்தரங்க வட்டத்துக்குள் ஊடுருவுவது போல இருந்தது. மிகுந்த கோபமும் திகைப்பும் அடைந்த நான், உடனே அந்த நபரை ‘பிளாக்’ செய்யத்தான் நினைத்தேன். ஆனால் அது மட்டும் போதாது, மக்கள் மத்தியில் அந்த ஆளின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். இதுபோன்ற இழிபிறவி களை பகிரங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது நம் எல்லோராலும் முடியும். அதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர். வரை போவது எனக்கு சிறு சஞ்சலத்தை ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் மகள் என்பதாலேயே என்னை ஸ்பெஷலாக நடத்துவார்கள் என்று நினைத்தேன். அதை நான் விரும்பவில்லை. ஆனால் இச்சம்பவம் பற்றி அறிந்ததும் எல்லா தரப்பில் இருந்தும் எனக்கு ஆதரவு கிடைத்தது. அப்போது தான், பெண்களின் பாதுகாப்புக் கருதி இந்த விஷயத்தில் நான் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்று திடமாக முடிவெடுத் தேன்”

இந்தச் சம்பவத்தில் இருந்து நீங்கள் கற்றது என்ன?

“பெண்களின் மனோபாவம் ரொம்பவும் மாறி இருப்பதை நான் உணர்ந்தேன். இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழிந்த நிலையில் நான் ஒரு பல்கலைக்கழகத்துக்கு பேச அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது இச்சம்பவம் குறித்து பேச்சு வந்தது. அவ்வேளையில் ஒரு மாணவி, ‘இதெல்லாம் சின்ன விஷயம்... நீங்கள் ஏன் கற்பழிப்பு மாதிரி யான பெரிய விஷயங்களைப் பற்றி பேசமாட்டேன் என்கிறீர்கள்?’ என்றார். உண்மையில் இந்த மாதிரியான மனோபாவத்தை மாற்றத்தான் நாம் போராடவேண்டும். ‘உங்கள் வீட்டில் உள்ள ஓர் ஆண் இப்படிச் செய்தால் அப்போதும் இது சின்ன விஷயம் என்றுதான் சொல்வீர்களா?’ என நான் அந்தப் பெண்ணிடம் கேட்டேன். இதுபோன்ற மனோபாவம் பெண்கள் மத்தியிலேயே ஆழமாக வேர்விட்டிருக்கிறது. குடும்பம், பள்ளி, பாடத்திட்டம் என்று ஒவ்வொரு தளத் திலும் நாம் அதை எதிர்த்துப் போராட வேண்டும். பெண்களுக்கு தங்கள் கவுரவம், சுயமரியாதை பற்றிப் போதிக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் சட்டத்தால் மட்டும் சரிசெய்துவிட முடியாது”

மனோபாவ மாற்றம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். அதனால்தான், நிர்பயா கற்பழிப்பு- கொலைக்கு எதிரான போராட்டத்தின்போது, ‘விளம்பரத்துக்காகச் சில பெண்கள் போராடுகிறார்கள்’ என்று உங்கள் சகோதரர் அபிஜித் முகர்ஜி கூறிய போது நீங்கள் அதைக் கடுமையாக விமர்சித்தீர்களா?

“அது நடந்தபோது நான் ஐதராபாத்துக்கு ஒரு நடன நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். நான் அங்கே ஓட்டலுக்கு திரும்பி டி.வி.யைப் போட்டால், எல்லா சேனல்களிலும் அபிஜித்தின் கருத்துதான் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. நான் உடனே போனில் அப்பாவை அழைத்துப் பேச முயன்றேன். ஆனால் அவர் அப்போது திருப்பதி கோவிலில் இருந்ததால் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அடுத்துத்தான் நான் ஒரு கடுமையாக அறிக்கையை வெளியிட முடிவெடுத்தேன். காரணம், அபிஜித் சொன்னது எங்களது குடும்ப மதிப்பீடுகளையோ, எங்கள் வளர்ப்பையோ பிரதிபலிக்கவில்லை. எனது செயல்பாடுகளில் நீங்கள் அதைக் காணலாம். இன்றுவரை அபிஜித் ஏன் அப்படிச் சொன்னான் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் இதுகுறித்து அவனிடம் பேசியபோது அவன் மிகவும் வருத்தம் தெரிவித்தான், வெட்கமடைந்தான்..”

உங்களின் வளர்ப்பு எப்படி இருந்தது?

“டெல்லியில் நாங்கள் மிகவும் சாதாரணமான, நடுத்தரக் குடும்பச் சூழலில்தான் வளர்ந்தோம். 1969-லேயே எம்.பி. ஆகிவிட்ட அப்பா, எப்போதும் பரபரப்பாக இருப்பார். ஆனாலும் எங்களுடன் அதிக நேரத்தைக் கழிக்க முயல்வார். இரவில் எவ்வளவு நேரமானாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது எங்களின் குடும்ப விதிகளில் ஒன்றாகவே இருந்தது. எல்லா குழந்தைகளையும் போல நாங்கள் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான் எங்கள் பெற்றோர் விரும்பினர். அரசியல் விஷயங்களை அப்பா வீட்டில் அதிகம் பேசமாட்டார் என்பதால் அது என் தலைக்குள் ஏறாமலே இருந்தது. எங்கம்மாதான் எங்கள் குடும்பத்தின் முதுகெலும்பு. எனவே அவர் காலமானபோது, என் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. என் அப்பா, அம்மா இருவருமே என்னில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே நான் நல்ல பெண்ணாக இருந்தாலும், மோசமான பெண்ணாக இருந்தாலும் அதற்கு அவர்கள்தான் காரணம். வாழ்க்கையில் நான் தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கும் எனது பெற்றோரே காரணம். ஒரு கதக் நடனக் கலைஞராகவும், நடன அமைப்பாளராகவும் உள்ள நான், தற்போது அரசியல்வாதி அவதாரமும் எடுத்திருக்கிறேன். நான் கலை மரபணுக்களை எங்கம்மாவிடம் இருந்தும், அரசியல் மரபணுக்களை எங்கப்பாவிடம் இருந்தும் பெற்றிருக்கிறேன்..”

நீங்கள் ஏன் முன்பே அரசியலில் பிரவேசிக்கவில்லை?


“அப்போது எனக்கு அரசியலில் ஆர்வமில்லை என்பதுதான் உண்மை. 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின்பே நான் அரசியலுக்கு வந்தேன். காரணம், நாட்டுக்குத் தேவையான கட்சி காங்கிரஸ்தான் என்று நான் நினைத்தேன். கட்சி நெருக்கடியில் இருக்கும்போது அதற்காக உழைக்க வேண்டும் என்றும் எண்ணினேன். இப்போதைக்கு நான் டெல்லி அரசியலில் கவனம் செலுத்துகிறேன். டெல்லி காங்கிரசின் தலைமை மக்கள்தொடர்பாளர், தகவல் தொடர்பு பொறுப்பாளர் நான். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடக கருத்தாளர்களில் ஒருவரும் கூட. அரசியலில் இணைந்த இரண்டாண்டுகளுக்கு உள்ளாக எனக்கு மிக முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் நான் எனது திறமையையும் அர்ப்பணிப்பையும் காட்ட வேண்டும்”

மலர்ந்த முகம் மாறாமல் கூறி விடைகொடுக்கிறார், ஷர்மிஸ்தா முகர்ஜி. 

Next Story