உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 30 April 2017 9:00 AM GMT (Updated: 2017-04-30T14:30:31+05:30)

‘பிளஸ்-டூ’ தேர்வு எழுதியிருக்கும் அந்த மாணவி, ரிசல்ட் விரைவில் வந்து விடும் என்பதால், ‘அடுத்து என்ன படிப்பது?’ என்ற சிந்தனையோடு இருந்து கொண்டிருந்தாள்.

‘பிளஸ்-டூ’ தேர்வு எழுதியிருக்கும் அந்த மாணவி, ரிசல்ட் விரைவில் வந்து விடும் என்பதால், ‘அடுத்து என்ன படிப்பது?’ என்ற சிந்தனையோடு இருந்து கொண்டிருந்தாள். ஆனாலும் வீட்டில் எப்போதும் அதை பற்றியே பேசிக் கொண்டிருப்பதும், ரிசல்ட்டில் எந்த அளவுக்கு மதிப்பெண் வரும் என்று நினைத்துக் கொண்டேயிருப்பதும், ஒருவிதத்தில் அவளது மன அமைதியை கெடுத்துக் கொண்டு தானிருந்தது.

‘தோழிகள் யாராவது அழைத்தால், ஐஸ்கிரீம் பார்லர் எங்கேயாவது சென்று ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வரலாமே’ என்று நினைத்தபடி அவள் செல்போனையே பார்த்துக் கொண்டிருந்தபோது, ரிங்டோன் வெளிப்பட்டது.

எதிர்முனையில் சக மாணவன். அவன் அமைதியானவன். வகுப்பில் அவளுடன் பிரியமாக பேசுகிறவன்.

அவள் ‘ஹலோ’ சொல்ல, அவன் ‘என்ன பண்ணிட்டு இருக்கே?’ என்று கேட்டான். அவள் ‘போரடித்து போய் உட்கார்ந்திருக்கிறேன்’ என்றாள். ‘எனக்கும் அப்படித்தான் இருக்குது. நான் என் அண்ணனோட புது பைக்கை இரண்டு மணி நேரத்திற்கு இரவல் வாங்கியிருக்கேன். வா ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்’ என்றான்.

அவள் தயங்கினாள். ‘அதெல்லாம் வேண்டாம்பா’ என்றாள். ‘நம்ம ஸ்கூல் பிரண்ட்ஸ் நாலைந்து பேர் சேர்ந்துதான் போறோம். உன் தோழிகள்தான் அவர்களிடம் ஜோடி போட்டிருக்கிறார்கள். நீ எதுக்கும் பயப்படாதே. உன் சுடிதார் துப்பட்டாவால் முகத்தை நல்லா மூடி கட்டிக்கலாம். ஒரு ரவுண்ட்தான்.. அரை மணி நேரத்தில் திரும்பிடலாம்’ என்றவன், அடுத்த பத்து நிமிடத்தில் குறிப்பிட்ட இடத்தில் நிற்குமாறு அவளிடம் கூறினான்.

அவளுக்கும் ஆசை. பைக்கில் ஒரு நாளாவது ஜோடி போட்டு சுற்றவேண்டும் என்று! ஆனாலும் மனது தடைபோட்டது. அரை மணி நேரம் அமைதியாக இருந்துவிட்டாள். அவன் காத்திருந்துவிட்டு போகட்டும் என்று!

அவனோ மீண்டும் அழைத்தான். வேறுவழியில்லாமல் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு, போய்விட்டாள். அவன் வந்து பைக்கில் ஏற்றிக்கொண்டான். அவள் மனம் படபடத்தது. அவனை பிடிக்கவா? பிடிக்காமல் இருக்கவா? அவனோடு நெருங்கியிருக்கலாமா? தள்ளி உட்கார்ந்திருக்கலாமா?.. என்றெல்லாம் ஏகப்பட்ட குழப்பங்கள். பட்டும் படாமலும் உட்கார்ந்திருந்தாள்.

இவனது பைக்கை பார்த்ததும் நண்பர்கள் சிலரும் அவரவர் ஜோடிகளுடன் விரைந்து வர, மின்னல் வேகத்தில் ஓட்டினார்கள். தலைகால் புரியாத உற்சாகத்தில் ஆபத்தை உணரவில்லை. ஒரு ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியபோது அவன் வேகத்தை குறைக்கவில்லை. அவனோடு பட்டும்படாமலும் உட்கார்ந்திருந்த அவள், அந்த நேரத்தில் தடுமாறினாள். அப்படியே நிலைகுலைந்து கீழே விழுந்தாள்.

கணநேர களேபரம். பைக் எங்கோ போய் இடித்து நின்றது. அவனும் கீழே விழுந்திருந்தான். அவனுக்கும், பைக்குக்கும் பெரிய அளவில் சேதாரம் இல்லை. ஆனால் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, அவளை பதம்பார்த்து விட்டது. சில நிமிடங்கள் ஆம்புலன்ஸ் வந்து பிணமாக அவளை தூக்கிச் சென்றது.

கோடை விடுமுறையில் இப்படிப்பட்ட விபரீத விபத்துக்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மாணவ- மாணவிகளும், பெற்றோரும் இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!

- உஷாரு வரும். 

Next Story