சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு யார் அவர்? போலீசார் விசாரணை


சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் மீட்பு யார் அவர்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 May 2017 11:30 PM GMT (Updated: 2 May 2017 8:32 PM GMT)

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் அழுகிய நிலையில் கிடந்த பெண் பிணத்தை போலீசார் மீட்டு, அவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை கிண்டியில் மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. தொழில்நுட்ப கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்தநிலையில் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் பிரம்மபுத்திரா என்ற மாணவர்கள் தங்கும் விடுதி கட்டிடத்தின் அருகில் உள்ள முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து காவலாளி ஏழுமலை அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சென்னை கோர்ட்டூர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

பிணமாக கிடந்த பெண் இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்றும், அவருடைய உடல் முழுவதும் நீல நிறமாக மாறி இருந்ததாகவும், அவர் துப்புரவு தொழிலாளி போன்று இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

அவர் யார்?, எப்படி இறந்தார்?, உடல் முழுவதும் நீல நிறமாக மாறி இருப்பதால் பாம்பு கடித்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.1 லட்சம் திருட்டு

* பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் உள்ள ஜாபர்அலி என்பவருக்கு சொந்தமான கொசுவலை தயாரிக்கும் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

* செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கி தருவதாகக் கூறி 113 பேரிடம் தலா ரூ.20 ஆயிரம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக, சகாயமேரி என்ற பெண் மீது மீனம்பாக்கம் பாரதியார் நகரை சேர்ந்த ஏராளமான பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

* பேசின்பிரிட்ஜ் பாலம் அருகே கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த மினிவேன் மீது 108 ஆம்புலன்ஸ் மோதியதில் மினிவேன் டிரைவர் முத்துக்குமார் காயம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* அம்பத்தூரில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நெல்லை மாவட்டம் இடையன்குளம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (29) செங்குன்றம் வடகரை ஜங்ஷன் அருகே மோட்டார்சைக்கிளில் சென்றபோது லாரி மோதி பலியானார்.

* மாதவரம் கண்ணபிரான் கோவில் அருகே பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த கோபி (37), பால்ராஜ் (36), ராஜன் (47), ஜார்ஜ் (52) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் ரூ.1,600-ஐ பறிமுதல் செய்தனர்.

* ஓட்டேரி பகுதியை சேர்ந்த இப்ராகீமிடம் (51), தோஷம் கழிப்பதாகக்கூறி ரூ.2,500 மோசடி செய்ததாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தீபக் (24), முகமது ஜாகீர் (24), அர்ஜூன் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story