மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2017 11:15 PM GMT (Updated: 2017-05-03T02:59:31+05:30)

ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் தெரு சங்கர்தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 35). இவருடைய மனைவி தெய்வானை(34). இந்த தம்பதிக்கு குணசேகரன்(9), நிஷாந்தினி(1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். குணசேகரன் கே.கே.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். விஸ்வநாதன் திருச்சி ஸ்ரீரங்கம் ‘பூ‘ மார்க்கெட் அருகே சாத்தாரவீதியில் செருப்புகடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது இரவு 9 மணிக்கு மேல் தெய்வானையின் தங்கை சுலோச்சனா தனது அக்காளுக்கு பலமுறை போன் செய்தார். ஆனால் தெய்வானை போனை எடுக்கவில்லை.

வீட்டுக்குள் பிணங்கள்

ஒருவேளை அவர்கள் தூங்கி இருப்பார்கள் என்று நினைத்த அவர், மீண்டும் காலையில் பலமுறை போன் செய்தார். அப்போதும் போனை எடுக்காததால் சுலோச்சனாவின் கணவர் முத்துக்குமார் நேற்று காலை 10.30 மணி அளவில் விஸ்வநாதன் வீட்டுக்கு சென்றார். அங்கு அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வெளியே நின்று கதவை தட்டினார். நீண்டநேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு தெய்வானை மற்றும் 2 குழந்தைகளும் படுக்கையில் பிணமாக கிடந்தனர். அங்குள்ள ஒரு அறையில் விஸ்வநாதன் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இந்த காட்சியை கண்ட முத்துக்குமார் கதறி அழுதார்.

விஷம் கொடுத்து கொலை

அவரது சத்தம்கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இதனை கண்டு ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீரங்கம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று விஸ்வநாதன் வீட்டினுள் சோதனை நடத்தினார்கள். அங்கு ஒரு விஷபாட்டிலும் அதன் அருகே குளிர்பான பாட்டிலும் கிடந்தது. இதனால் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து மனைவி மற்றும் குழந்தைகளுக்கு கொடுத்து கொன்றுவிட்டு அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரூ.1 கோடி கடன் நெருக்கடி

இதற்கிடையே தகவல் அறிந்து விஸ்வநாதன் வீட்டுக்கு அவரது உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் வீட்டின் முன்பு நின்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து விஸ்வநாதன் உறவினர்கள் கூறியதாவது:-

குடும்ப பிரச்சினை காரணமாக விஸ்வநாதன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வநாதனுக்கு திருவெறும்பூரை சேர்ந்த ஒரு பெண் அறிமுகமானார். அவர் ஸ்ரீரங்கத்தில் வெளிநாட்டை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரதநாட்டியம் கற்று கொடுக்க நடனப்பள்ளி ஆரம்பிக்க இருப்பதாகவும், இதற்காக ரூ.1 கோடி வரை தேவை என்றும் விஸ்வநாதனிடம் கேட்டுள்ளார்.

அவரும் வெளியே தெரிந்தவர்கள் மூலம் கடன் வாங்கி அந்த பெண்ணிடம் பணத்தை கொடுத்தார். அதன்பிறகு அந்த பெண் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து பலமுறை கேட்டும் பலனில்லாததால் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஸ்வநாதனிடம் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் அவர் மனமுடைந்து இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டார். ஆகவே இது குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பெண்ணிடம் விசாரணை

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், விஸ்வநாதன் பணம் கொடுத்ததாக கூறப்பட்ட அந்த பெண்ணை அழைத்து வந்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் கடன் தொல்லையால் மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story