கோவில்பட்டியில், புதுப்பிக்கப்பட்ட அண்ணா பஸ் நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கியது


கோவில்பட்டியில், புதுப்பிக்கப்பட்ட அண்ணா பஸ் நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கியது
x
தினத்தந்தி 3 May 2017 9:00 PM GMT (Updated: 2017-05-03T17:36:47+05:30)

கோவில்பட்டியில், ரூ.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பஸ் நிலையம் நேற்று முதல் முழுமையாக செயல்பட தொடங்கியது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், ரூ.5 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா பஸ் நிலையம் நேற்று முதல் முழுமையாக செயல்பட தொடங்கியது.

ரூ.5 கோடி செலவில்...

கோவில்பட்டி நகருக்குள் அமைந்துள்ள அண்ணா பஸ் நிலையம் ரூ.5 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் இந்த பஸ் நிலையம் மூடப்பட்டு, அருகில் தற்காலிக பஸ்நிலையம் செயல்பட்டு வந்தது. அத்துடன் பெரும்பாலான வெளியூர் பஸ்கள் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தன.

பஸ் நிலையம் திறப்பு

பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், மேற்கு பகுதியில் மட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காணொலிக்காட்சி மூலம் இந்த பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, அந்த பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள், மினி பஸ்கள் சென்று, பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன. வெளியூர் செல்லும் பஸ்கள், கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வந்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.

முழுவதுமாக செயல்பட...

தற்போது பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, நேற்று முதல் அண்ணா பஸ் நிலையம் முழுமையாக செயல்பட தொடங்கியது. அங்கிருந்து நெல்லை, மதுரை, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்செந்தூர், அருப்புகோட்டை, கழுகுமலை, சங்கரன்கோவில் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில பஸ்கள், கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, அண்ணா பஸ் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன.

கூடுதல் பஸ் நிலையத்தில்...

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட நெடுந்தூரங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அண்ணா பஸ் நிலையம் மீண்டும் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வந்ததால், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story