திருச்செந்தூரில் பரிதாபம்: பிளஸ்–2 மாணவி தற்கொலை உயர்கல்வி படிக்க தாயார் மறுத்ததால் சோக முடிவு


திருச்செந்தூரில் பரிதாபம்: பிளஸ்–2 மாணவி தற்கொலை உயர்கல்வி படிக்க தாயார் மறுத்ததால் சோக முடிவு
x
தினத்தந்தி 3 May 2017 8:30 PM GMT (Updated: 3 May 2017 3:13 PM GMT)

திருச்செந்தூரில் உயர்கல்வி படிக்க தாயார் அனுமதிக்காததால், பிளஸ்–2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூரில் உயர்கல்வி படிக்க தாயார் அனுமதிக்காததால், பிளஸ்–2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்–2 மாணவி

திருச்செந்தூர் தாலுகா அலுவலக ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விநாயக முத்து. இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 40). இவர்களுடைய மகள்கள் சீதாலட்சுமி, காளியம்மாள் என்ற கவுசல்யா (17). விநாயக முத்து, அய்யம்மாள் ஆகிய 2 பேரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். அய்யம்மாள், திருச்செந்தூரில் உள்ள ஓட்டலில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கவுசல்யா, பிளஸ்–2 தேர்வு எழுதி இருந்தார்.

உயர்கல்வி படிக்க மறுப்பு

சீதாலட்சுமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கவுசல்யா பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியானதும், கல்லூரியில் சென்று உயர்கல்வி படிக்க விரும்புவதாக தாயாரிடம் கூறினார். இதற்கு அய்யம்மாள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கவுசல்யா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு உள்ளார்.

தூக்கில் தொங்கினார்

நேற்று முன்தினம் சீதாலட்சுமி, கவுசல்யா ஆகிய 2 பேரும், திருச்செந்தூர் சுப்பிரணியபுரத்தில் உள்ள தங்களது பெரியம்மா சங்கரம்மாளின் வீட்டுக்கு சென்றனர். பின்னர் மாலையில் கவுசல்யா மட்டும், தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

அப்போது வீட்டுக்கு வந்த அய்யம்மாள், தனது மகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, கவுசல்யாவை காப்பாற்றி சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கவுசல்யாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று, இறந்த கவுசல்யாவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story