தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்


தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-04T01:18:29+05:30)

கள்ளக்குறிச்சியில் தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சி 2–வது வார்டு வ.உ.சி. நகர் 5 மற்றும் 6–வது தெருக்களில் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து குழாய் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொது மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சியால் ஆழ்துளை கிணறு வறண்டது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றாமல், கடந்த சில நாட்களாக பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் நேற்று காலை 9 மணி அளவில் காலி குடங்களுடன் கள்ளக்குறிச்சி–கச்சிராயப்பாளையம் சாலைக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் பகுதியில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் கூறி கோ‌ஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் லட்சுமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது பொதுமக்கள், தங்கள் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. அவ்வாறு செல்லும் போது அப்பகுதி மக்களுக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே எங்கள் பகுதியில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு நகராட்சி ஆணையாளர் லட்சுமி, தடையின்றி குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது உடனடியாக நகராட்சி நிர்வாகம் சார்பில் 2 லாரிகள் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள் 9.30 மணி அளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story