பங்களாப்புதூர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் வாழைகள் சேதம்


பங்களாப்புதூர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் வாழைகள் சேதம்
x
தினத்தந்தி 3 May 2017 9:45 PM GMT (Updated: 3 May 2017 8:23 PM GMT)

பங்களாப்புதூர் அருகே தோட்டத்தில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் வாழைகள் சேதம் ஆனது.

டி.என்.பாளையம்,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிரை நாசப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் டி.என்.பாளையம் வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் வெளியேறின. இந்த யானைகள் வனப்பகுதியையொட்டி எருமை குட்டை என்ற இடத்தில் உள்ள பழனிசாமி என்பவரது வாழைத்தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த கம்பி வேலியை காலால் உதைத்து தள்ளின. பின்னர் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்த தொடங்கின.

தானாகவே வனப்பகுதிக்கு சென்றன

யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் இருந்த பழனிசாமி ஓடிவந்து பார்த்தார். அப்போது யானைகள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்து விவசாயிகளை உதவிக்கு அழைத்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டி யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் விவசாயிகள் திரும்பி சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து அருகே உள்ள மற்றொரு விவசாயியான பழனிசாமியின் வாழை தோட்டத்தில் புகுந்தன. அங்குள்ள வாழைகளை யானைகள் நாசப்படுத்தின. அதன்பின்னர் நேற்று காலை 5.30 மணி அளவில் தானாகவே வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.


Next Story