டாக்டர்கள் போராட்டம் தீவிரம்: அறுவை சிகிச்சை செய்வதை புறக்கணித்து தர்ணா


டாக்டர்கள் போராட்டம் தீவிரம்: அறுவை சிகிச்சை செய்வதை புறக்கணித்து தர்ணா
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-04T02:38:21+05:30)

குமரி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்வதை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில்,

அரசு ஆஸ்பத்திரிகளில் 2 ஆண்டுகள் பணிபுரிந்த டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இடஒதுக்கீட்டிற்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க கோரியும், தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதிலும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குமரி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதன்படி டாக்டர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.

அறுவை சிகிச்சை புறக்கணிப்பு

இந்த நிலையில் டாக்டர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்வதை புறக்கணித்தனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க குமரி மாவட்ட கிளை சார்பில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்துக்கு முன் நேற்று 13-வது நாளாக தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் முத்துகுமார் முன்னிலை வகித்தார். இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள் கலந்துகொண்டனர்.

இதுபற்றி அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமாரிடம் கேட்டபோது, ‘எங்களது கோரிக்கை தொடர்பான போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக நேற்று அரசு ஆஸ்பத்திரிகளில் அறுவை சிகிச்சை செய்வதை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம். எனினும் அவசர அறுவை சிகிச்சை செய்வதற்காக டாக்டர்கள் பணியில் இருந்தார்கள். மேலும், மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு எடுப்பது, கலந்தாலோசிப்பது போன்றவற்றையும் நிறுத்தியிருக்கிறோம்’ என்றார்.

நோயாளிகள் பாதிப்பு

நேற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கும், அவசர கால சிகிச்சை பிரிவுக்கும் தேவையான டாக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அறுவை சிகிச்சை செய்வதை டாக்டர்கள் புறக்கணித்து இருந்ததால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டார்கள். 

Related Tags :
Next Story