மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி சாவு நண்பருக்கு தீவிர சிகிச்சை


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; தொழிலாளி சாவு நண்பருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-04T02:38:23+05:30)

ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அழகியநகரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 35), செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் சுந்தர் (38). அதே பகுதியில் வசித்து வருகிறார். சுந்தர், அவரது மோட்டார் சைக்கிளுக்கு தவணை பணம் செலுத்துவதற்காக அஞ்சுகிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். இவருடன் குணசேகரனும் சென்றார்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஆரல்வாய்மொழி மருத்துவநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி ஒரு கார் வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த குணசேகரனும், சுந்தரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சுந்தர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

கதறி அழுத உறவினர்கள்

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தில் குணசேகரன் பலியானதை அறிந்த அவருடைய உறவினர்கள், சம்பவ இடத்தில் திரண்டு அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். அதைத் தொடர்ந்து பிணமாக கிடந்த குணசேகரன் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story