குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 2017-05-04T02:39:43+05:30)

குடிநீர் வழங்கக்கோரி தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

தோகைமலை,

தளிஞ்சி ஊராட்சியில் உள்ள காந்திநகர், பாக்குழி காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செம்மேட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தளிஞ்சி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆணையர் மனோகரன், பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மனு

இதேபோல் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் உள்ள மனச்சனம்பட்டி காலனியில் சுமார் 50 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதிக்கு காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் தோகைமலை ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து ஆணையர் மனோகரனிடம் மனு கொடுத்தனர். அப்போது மனச்சனம்பட்டி காலனி பகுதிக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்து உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி கூறினார்.


Related Tags :
Next Story