ஹைட்ரோ கார்பன் ரத்து செய்ய கோரி வாழை இலையில் எரிபொருளை பரிமாறி நூதன போராட்டம்


ஹைட்ரோ கார்பன் ரத்து செய்ய கோரி வாழை இலையில் எரிபொருளை பரிமாறி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 11:15 PM GMT (Updated: 2017-05-04T02:42:51+05:30)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி வாழை இலையில் எரிபொருளை பரிமாறி நெடுவாசலில் சிறுவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதை கண்டித்து நெடுவாசல் கிராம மக்கள் 2-வது கட்டமாக நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே கடந்த மாதம் 12-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வாழை இலையில் எரிபொருள்

அதன்படி நேற்று 22-வது நாளாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நெடுவாசல் போராட்ட பந்தல் அருகே வாழை இலை போட்டு அதில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நிலக்கரி, பெட்ரோல் ஆகியஎரிபொருளை பரிமாறி உணவு சாப்பிடுவதுபோல சிறுவர்கள் நடித்துக்காட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாரும் உயிர் வாழ முடியாது

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் இதுவரை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. உலகுக்கு உணவு வழங்கும் விவசாயத்தை அழித்துவிட்டு ஹைட்ரோ கார்பன் போன்ற எரிபொருட்களை சாப்பிட்டு யாரும் உயிர்வாழ முடியாது என்பதை உணர்த்தவே இதுபோன்ற போராட்டத்தை நடத்தினோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்தனர்.


Related Tags :
Next Story