திருமஞ்சனவீதி வாய்க்காலை ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு


திருமஞ்சனவீதி வாய்க்காலை ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 3 May 2017 9:12 PM GMT)

கும்பகோணம் அருகே திருமஞ்சனவீதி வாய்க்காலை ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரில் உள்ள குளங்கள் மற்றும் பாசனவாய்்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அவற்றை முறையாக பராமரிக்காமல், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை வீணாக்கியதாகவும், கும்பகோணத்தைச் சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலையை நியமித்து கும்பகோணத்தில் உள்ள குளங்கள், பாசன வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்க செய்ய உத்தரவிட்டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு

அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ஆய்வை தொடங்கினார். கும்பகோணத்தில் உள்ள குளங்கள், பாசன வாய்க்கால் களை ஆய்வு செய்தார். அப்போது 40 குளங்களில் சுமார் 350 ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை அறிவுரைப்படி நில அளவையர்கள் வாய்க்கால்களின் நீளம், அகலம் ஆகியவற்றை அளவீடு செய்ய உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கும்பகோணம் நகரில் ஓடும் காவிரி மற்றும் அரசலாற்றிலிருந்து பிரிந்து செல்லும் 11 பாசன வாய்க்கால்களில் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கல் நடப்பட்டதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு நடத்தினார்.

மீண்டும் ஆய்வு

இந்த நிலையில் மீண்டும் நேற்று கும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை கிராமத்தில் உள்ள திருமஞ்சனவீதி வாய்க்கலை ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை ஆய்வு செய்தார்.

அங்கிருந்து அவர் சுமார் 4 கி.மீ தூரம் உள்ள ஆலையடி ரோடு வரை சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து குறிப்பெடுத்துக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது நில அளவையர்கள், மின்வாரிய, பொதுப்பணித்துறை, நகராட்சி, வருவாய்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடன் சென்றிருந்தனர்.


Related Tags :
Next Story