டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பொதுமேலாளரிடம் மனு அளித்தனர்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் பொதுமேலாளரிடம் மனு அளித்தனர்
x
தினத்தந்தி 3 May 2017 11:00 PM GMT (Updated: 3 May 2017 9:14 PM GMT)

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூடப்பட்ட டாஸ்மாக்கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கக்கோரி பொது மேலாளரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாற்றுப்பணி இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்திற்கு நேற்று டாஸ்மாக் பொது மேலாளர் தங்கவேல் வந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் 150-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு வந்தனர்.

மாற்றுப்பணி வேண்டும்

அவர்கள் பொதுமேலாளர் தங்கவேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் “உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய 600-க்கும் அதிகமான ஊழியர்கள் வேலையிழந்து தவிக்கின்றோம்.

கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய எங்களுக்கு கல்விதகுதி அடிப்படையில் அரசு துறைகள், அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் மாற்றுப்பணி வழங்க வேண்டும். பணி வழங்கும் வரை தற்போது செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அடிப்படையில் மூடப்பட்ட கடை ஊழியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர். டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட பொதுமேலாளர் தங்கவேல், பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதையடுத்து அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஊழியர்கள் டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட கவுரத்தலைவர் ஜெயபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் செயலாளர் வீரையன், தலைவர் எட்வின்ஆரோக்கியராஜ், பொருளாளர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story