கட்டாயமாக ஹெல்மெட் அணியும் திட்டம்: பொதுமக்களிடம் ‘கெடுபிடி’ வேண்டாம்


கட்டாயமாக ஹெல்மெட் அணியும் திட்டம்: பொதுமக்களிடம் ‘கெடுபிடி’ வேண்டாம்
x
தினத்தந்தி 3 May 2017 11:30 PM GMT (Updated: 3 May 2017 9:22 PM GMT)

கட்டாயமாக ஹெல்மெட் அணியும் திட்டம்: பொதுமக்களிடம் ‘கெடுபிடி’ வேண்டாம், போலீசாருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு

புதுச்சேரி,

புதுச்சேரியில் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மே 1-ந்தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரசால் அறிவிக்கப்பட்டது.

கட்டாய ஹெல்மெட் திட்டம்

அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் புதுவையில் கட்டாயமாக ஹெல்மெட் அணியும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி இந்திராகாந்தி சிலை, அஜந்தா சிக்னல், அண்ணா சாலை, கோரிமேடு உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் முகாமிட்டு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.

கடந்த 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக சுமார் 4 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் வசூலித்த போலீசாரிடம் பெண்களும், இளைஞர்களும் பல இடங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடும் எதிர்ப்பு

இதற்கிடையே அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் ஹெல்மெட் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திட்டத்தை கட்டாயமாக்க கூடாது. ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை விரும்பி அணியச் செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் அசவுகரியம் மற்றும் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து அரசிடமும் ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

சாலை பாதுகாப்பு குழு கூட்டம்

இந்தநிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சாலை பாதுகாப்பு குழு கூட்டம் சட்டசபை வளாகத்தில் நேற்று பிற்பகல் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசு செயலாளர்கள் அருண்தேசாய், பாபு, போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்களின் எண்ணங்கள்

புதுவை மாநிலத்தில் கடந்த 1-ந்தேதி முதல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த திட்டம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் கூட சில கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டத்தினால் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நகரப் பகுதியில் ஹெல்மெட் அணிவதால் பல பிரச்சினைகள் எழுவதாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக கூட்டத்தில் பரிசீலனை செய்தோம். இந்த விவகாரத்தில் பொதுமக்களின் எண்ணங் களை பரிசீலனை செய்து சில முடிவுகளை எடுக்க உள்ளோம்.

துன்புறுத்தக்கூடாது

காவல்துறை தகவலின்படி கடந்த 2 நாட்களில் புதுவையில் உள்ள 9 லட்சம் வாகனங்களில் சுமார் 3 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நிறைய பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியதாகவும் தெரிவித்தனர்.

போலீசாரும், போக்குவரத்துத் துறையினரும் ஹெல்மெட் அணிவதில் ஓட்டுனர்களுக்கு அவகாசம் தரவேண்டும். பொதுமக்களை போலீசார் துன்புறுத்தக் கூடாது என்று தெரிவித்து உள்ளேன். இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு ரூ.1000 வரை அபராதம் விதிக்க சட்டம் இயற்றி உள்ளது.

‘கெடுபிடி’ வேண்டாம்

ஹெல்மெட் அணியும் விவகாரத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகளின் கருத்துக்களை அறிந்து மாற்றம் கொண்டுவர ஒரு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக போக்குவரத்துத்துறை செயலாளர் அருண்தேசாய் இருப்பார். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

பொதுமக்கள் மற்றும் பிற துறையினரிடம் ஒருவார காலம் கருத்துகேட்டு அரசுக்கு அவர்கள் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதில் தெரிவிக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையிலும் குழுவின் முடிவின்படியும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஹெல்மெட் விவகாரத்தில் பொதுமக்களிடம் போலீசார் ‘கெடுபிடி’ செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சி வேலை

நாராயணசாமி மேலும் கூறுகையில், ‘ஹெல்மெட் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக அன்பழகன் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் எதிர்க்கட்சி வேலையை அவர் பார்த்துள்ளார். அதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்’ என்று தெரிவித்தார். 

Next Story