அரசு டாக்டர்கள் மனிதசங்கிலி போராட்டம்


அரசு டாக்டர்கள் மனிதசங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 3 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-04T03:19:34+05:30)

தர்மபுரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் நேற்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

அரசு டாக்டர்களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்பில் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்றது. பெரும்பாலான அரசு டாக்டர்கள் நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

அப்போது தர்மபுரி–சேலம் சாலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முதல் அரசு மருத்துவக்கல்லூரி வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

விதிகளில் மாற்றம்

இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆண், பெண் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் திரளாக பங்கேற்றனர். மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளில் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மனித சங்கிலி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. டாக்டர்களின் பணி புறக்கணிப்பால் அரசு ஆஸ்பத்திரிகளில் மருத்துவ சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன. முக்கிய மருத்துவ சிகிச்சை பிரிவுகளில் குறைந்த எண்ணிக்கையில் டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர்.


Next Story