பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது விபரீதம் பாந்திரா கடலில் மூழ்கி மதுரை கல்லூரி மாணவி பலி


பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது விபரீதம் பாந்திரா கடலில் மூழ்கி மதுரை கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 3 May 2017 9:51 PM GMT (Updated: 2017-05-04T03:22:39+05:30)

மும்பைக்கு சுற்றுலா வந்த மதுரை கல்லூரி மாணவி பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது பாந்திரா கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பை,

மும்பைக்கு சுற்றுலா வந்த மதுரை கல்லூரி மாணவி பாறையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது பாந்திரா கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பைக்கு சுற்றுலா

மதுரை, பார்க் டவுண் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ராமேஸ்வரி, மீனாட்சி பிரியா (வயது 21) என்ற மகள்கள் இருந்தனர். மீனாட்சி பிரியா விருதுநகரில் உள்ள காமராஜர் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். சமீபத்தில் மீனாட்சி பிரியாவிற்கு என்ஜினீயரிங் இறுதி செமஸ்டர் தேர்வு முடிந்துள்ளது. எனவே விடுமுறையை கொண்டாட அவர் குடும்பத்தினருடன் மும்பைக்கு கடந்த 30–ந் தேதி வந்தார். அவர்கள் சாக்கிநாக்கா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர்.

இந்தநிலையில் அனைவரும் கடந்த திங்கட்கிழமை வாடகை காரில் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்தனர். மாலை 3.30 மணியளவில் பாந்திரா பேண்டு ஸ்டாண்டு பகுதிக்கு சென்றனர்.

செல்பி விபரீதம்

அங்கு பாந்திரா கோட்டை பகுதியில் இருந்த ஒரு பாறையின் மீது நின்று மீனாட்சி பிரியா, குடும்பத்தினருடன் செல்பி எடுக்க விரும்பினார். அப்போது அடித்த ராட்சத அலையில் மீனாட்சி பிரியா நிலைதடுமாறி பாறையில் இருந்து கடலுக்குள் விழுந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உதவி கேட்டு கதறினர். ஆனால் அது அபாயகரமான பகுதி என்பதால் யாராலும் மீனாட்சி பிரியாவை மீட்க முடியவில்லை. இந்தநிலையில் தகவல் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

உடல் மீட்பு

அவர்கள் மாணவியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் மாலை 6 மணியளவில் பாந்திரா – ஒர்லி கடல் வழி மேம்பாலம் அருகே மீனாட்சி பிரியாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாபா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பாந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று முன்தினம் மாணவியின் உடல் மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக பாந்திரா சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பண்டித் தாக்கரே கூறினார்.

தமிழக மாணவி பலியான அதே இடத்தில் விழுந்து கடந்த ஆண்டு மும்பை கல்லூரி மாணவி ஒருவரும், அவரை காப்பாற்ற முயன்றவரும் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story