‘பாகிஸ்தானை துண்டு, துண்டாக கிழித்து எறியுங்கள்’ பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்


‘பாகிஸ்தானை துண்டு, துண்டாக கிழித்து எறியுங்கள்’ பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 May 2017 10:02 PM GMT (Updated: 2017-05-04T03:32:24+05:30)

‘‘பாகிஸ்தானை துண்டு, துண்டாக கிழித்து எறியுங்கள்’’ என்று பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

மும்பை,

‘‘பாகிஸ்தானை துண்டு, துண்டாக கிழித்து எறியுங்கள்’’ என்று பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே வலியுறுத்தினார்.

2 ராணுவ வீரர்கள் பலி

காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணகாதி பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை சாடிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘‘மன் கி பாத் (மனதில் இருந்து பேசுகிறேன்) நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, ‘கன் கி பாத்’தை (துப்பாக்கி மூலம் பேசுங்கள்) தொடங்குங்கள்’’ என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சூழலில், நேற்று மும்பை பாந்திராவில் உள்ள ரங்கசாரதா அரங்கில் அக்கட்சி தொண்டர்களை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:–

சிவசேனா துணைநிற்கும்

கட்சியை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, நாட்டையும், மாநிலத்தையும் வலுப்படுத்துவதில் பாரதீய ஜனதா கவனம் செலுத்தட்டும். எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உத்தர பிரதேசத்தில் ‘யோகி அரசு’ இருக்கிறது. ஆனால், இங்கு ‘யோக்கியமற்ற அரசு’ இருக்கிறது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்நாட்டை துண்டு, துண்டாக கிழித்து எறியுங்கள். பிரதமர் மோடிக்கு பின்னால் சிவசேனா துணைநிற்கும்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

தேசவிரோதி

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து பேசிய அவர், ‘‘விவசாயிகளுக்கு ஆதரவாக யாராவது குரல் கொடுத்தால் உடனே அவரை தேசவிரோதியாக சித்தரிக்கும் சூழல் நாட்டில் நிலவுகிறது’’ என்றார். அத்துடன் உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜனதாவின் வெற்றி பாராட்டத்தக்கது என்றாலும், கோவா சட்டசபை தேர்தல் முடிவை புறக்கணித்துவிட முடியாது என்றும் கூறினார்.

இதுபற்றி உத்தவ் தாக்கரே குறிப்பிடுகையில், ‘‘கோவா தேர்தலில் எந்தவொரு முகத்தையும் காங்கிரஸ் சித்தரிக்கவில்லை. ஆயினும், பா.ஜனதாவை காட்டிலும் காங்கிரஸ் 4 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றது. இதனை புறக்கணித்துவிட முடியாது’’ என்றார்.


Next Story