ஆம்பூரில் ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை திருடிய 3 பேர் கைது


ஆம்பூரில் ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 May 2017 11:35 PM GMT (Updated: 2017-05-04T05:04:49+05:30)

ஆம்பூரில் ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

ஆம்பூர்,

ஆம்பூரில் ஆசிரியை வீட்டில் 32 பவுன் நகை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

ஆசிரியை வீட்டில் திருட்டு

ஆம்பூர் சான்றோர்குப்பம் பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 63). இவர் ஆந்திர அரசு போக்குவரத்து கழகத்தில் கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி வைலட் விக்டோரியா (50). இவர் செங்கிலிகுப்பம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவாமிநாதன் தனது மனைவி மற்றும் மகளுடன் கோடை விடுமுறைக்காக ஊட்டி சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்துபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 32 பவுன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி நகை மற்றும் ரூ.1 லட்சம் ஆகியவை திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்தநிலையில் ஆம்பூர் டவுன் போலீசார் பை–பாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின்னாக பதில் அளித்தனர்.

அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது விண்ணமங்கலத்தை சேர்ந்த ராம்குமார் (28), உதயேந்திரத்தை சேர்ந்த சுஹேல் (28), வாணியம்பாடியை சேர்ந்த உமேஷ்குமார் (36) என்பதும், ஆம்பூர் சான்றோர்குப்பம் ஆசிரியை வீட்டில் திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story