காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட உள்ள தண்ணீரை இதர பயன்பாட்டிற்கு எடுக்க கூடாது


காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட உள்ள தண்ணீரை இதர பயன்பாட்டிற்கு எடுக்க கூடாது
x
தினத்தந்தி 6 May 2017 10:45 PM GMT (Updated: 2017-05-07T01:50:49+05:30)

காவிரி ஆற்றில் குடிநீருக்காக திறக்கப்பட உள்ள தண்ணீரை, இதர பயன்பாட்டிற்கு எடுக்க கூடாது என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பரமத்திவேலூர்,

கடும் வறட்சியின் காரணமாக காவிரி ஆற்றில் முற்றிலும் நீர் வரத்து குறைந்த நிலையில், குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் மற்றும் விவசாய கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து உள்ளது. எனவே, விவசாயிகள் காவிரி ஆற்றில் இருந்து மின் மோட்டார் மற்றும் ஆயில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர்.

ஆனால், குடிநீருக்காக மட்டும் திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீரை முறைகேடாக விளை நிலங்களுக்கு பாய்ச்சுவது குற்றம் என கூறி பொதுப்பணித் துறையினர் விவசாயிகளுக்கும், தனியார் நீர் உந்தும் நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை என்ஜினீயர் இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கடுமையான நடவடிக்கை

குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி (வெண்டிபாளையம்) கதவணையில் இருந்து சுமார் 400 கனஅடி நீர் விரைவில் திறக்கப்பட உள்ளது. குடிநீருக்காக திறந்து விடப்பட உள்ள நீரை முறைகேடாக நீர் உந்தும் நிலையங்கள், மின் மோட்டார்கள், ஆயில் மோட்டார்கள் வைத்து இதர பயன்பாட்டிற்கு எடுத்தால் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.


Next Story