மின் இணைப்பை மாற்றுவதற்கு வியாபாரியிடம் ரூ.7,200 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
வேலூரில் மின் இணைப்பை மாற்றுவதற்கு வியாபாரியிடம் ரூ.7,200 லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
வேலூர்,
வேலூர் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பசுலுல்லா (வயது 63), வேலூர் சாரதி மாளிகையில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டு மின்இணைப்பை மும்முனை இணைப்பாக மாற்ற முடிவு செய்தார். இதற்காக சலவன்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.
ஆனால் அதிகாரிகள் மின் இணைப்பை மாற்றிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளனர். கடந்த 8–ந் தேதி பசுலுல்லா சலவன்பேட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்பை மாற்றுவது குறித்து மின்வாரிய வணிக ஆய்வாளரான ஜீவானந்தம் (55) என்பவரை அணுகியிருக்கிறார்.
கையும் களவுமாக பிடிபட்டார்அப்போது மின் இணைப்பை மாற்றுவதற்கு கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 800 கட்டவேண்டும். அதோடு ரூ.7 ஆயிரத்து 200 லஞ்சமாக சேர்த்து மொத்தம் ரூ.14 ஆயிரம் கொடுத்தால் உடனே மின் இணைப்பை மும்முனை இணைப்பாக மாற்றித் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் பசுலுல்லாவுக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லை. ஆனாலும் பணம் தருவதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் இதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் பசுலுல்லா புகார் செய்தார். அதன்பேரில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பசுலுல்லாவிடம் கொடுத்து அனுப்பினர். அவருடன் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, அசோகன் ஆகியோரும் சென்று மின்வாரிய அலுவலகத்திற்கு வெளியே மறைந்திருந்தனர்.
மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த அதிகாரி ஜீவானந்தத்தை, பசுலுல்லா சந்தித்து பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் சென்று ஜீவானந்தத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.