சேலத்தில், முறையாக பராமரிக்காத 6 தனியார் பள்ளி வாகனங்களின் உரிமம் ரத்து அதிகாரிகள் நடவடிக்கை
சேலத்தில், முறையாக பராமரிக்காத 6 தனியார் பள்ளி வாகனங்களின் உரிமத்தை ரத்து
சேலம்,
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி மாணவ–மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் உள்ள அனைத்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா? தகுதி சான்றுகள் உள்ளதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யுமாறு அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உயர் அதிகாரிகள் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சேலம் அம்மாபேட்டை, வலசையூர், வீராணம், அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் 250–க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் உள்ளன. முதற்கட்டமாக 200 வாகனங்கள் ஒரே இடத்திற்கு வரவழைக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.
உரிமம் ரத்துஅப்போது, தீயணைப்பு கருவி இல்லாதது, அவசர கதவுகள் பழுதடைந்து இருப்பது, வாகனங்களின் உரிமம் புதுப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கொண்டதாக 20 பள்ளி வாகனங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சீரமைத்து காண்பிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், 20 பள்ளி வாகனங்களில் 14 வாகனங்களில் இருந்த குறைபாடுகளை சரி செய்யப்பட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீதியுள்ள 6 வாகனங்கள் இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் அந்த 6 பள்ளி வாகனங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்த பள்ளி வாகனங்கள் தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவுஇதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பதுமைநாதன் கூறுகையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பதற்கு முன்கூட்டியே அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்படும். சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில் சில வாகனங்களில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதை சரி செய்யுமாறு பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஆனால் பல்வேறு குறைபாடுகளும், முறையாக பராமரிக்காத 6 பள்ளி வாகனங்களின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். மீதியுள்ள வாகனங்கள் விரைவில் ஆய்வு செய்யப்படும், என்றார்.