கடலூர் அருகே, டிரைவரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு சொகுசு காரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது


கடலூர் அருகே, டிரைவரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு சொகுசு காரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 May 2017 4:45 AM IST (Updated: 11 May 2017 8:57 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே டிரைவரை தாக்கி கட்டிப்போட்டு விட்டு சொகுசு காரை கடத்தி சென்ற வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பையனூர் பெரியார்தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன். இவருடைய மகன் அசோக்(வயது 30). கார் டிரைவரான இவர் கடந்த 3–ந்தேதி இரவு வண்டலூரில் உள்ள ஒரு கார் நிறுத்தத்தில் சவாரிக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது 6 பேர், அவரிடம் வேளாங்கண்ணிக்கு செல்ல வேண்டும் என்று அழைத்தனர். அதற்கு அசோக் சம்மதித்ததும், அந்த 6 பேரும் காரில் ஏறி வேளாங்கண்ணி நோக்கி புறப்பட்டனர்.

கடலூரை அடுத்த ஆலப்பாக்கம் ரெயில்வே கேட் அருகில் மறுநாள் காலை 4 மணி அளவில் வந்த போது, அந்த காரில் வந்த 6 பேரும் அசோக்கை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டி, அவரை சாலையோரமாக வீசி விட்டு சொகுசு காரை கடத்தி சென்று விட்டனர்.

சொகுசு கார் பறிமுதல்

இது பற்றி அசோக் கொடுத்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த 8–ந்தேதி தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த சந்திரமோகன் மகன் சரத்பாபுகுமார் என்கிற சரத் (28), மேலசண்முகபுரம் கோபால் மகன் பிரபு (37) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 பேரை போலீசார் தேடிவந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் வண்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் டெல்டா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 பே பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி ராஜபாண்டியன் நகர் முத்துராஜ் மகன் சபரி என்கிற செல்வகுமார் (27), முத்தையாபுரம் கீழவீதி ராமச்சந்திரன் மகன் கன்னிவிஜய் (28), முனியசாமி மகன் துரைராஜ் (22) ஆகியோர் என்பதும், சொகுசு கார் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் என்பதும், கடலூர் மத்திய சிறையில் உள்ள தனது 2 நண்பர்களை பார்க்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story