கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்


கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 11 May 2017 10:22 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு, சுனாமிக்கு பின்பு கடலில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடல் நீர் உள்வாங்குதல், நீர் மட்டம் உயருதல், குளம் போல் காட்சி அளித்தல், கடல் கொந்தளிப்பு போன்ற மாற்றங்கள் ஏற்படுகிறது.

இந்தநிலையில், நேற்று காலை கன்னியாகுமரி கடல் இயல்பாக காணப்பட்டது. விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம் போல் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கடலின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டது. மதியம் 1 மணியளவில் கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து பாறைகளில் மோதி சிதறின. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் அவசரம் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

படகு போக்குவரத்து நிறுத்தம்

தொடர்ந்து, மதியம் 1.30 மணியளவில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையே, கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்த வண்ணம் இருந்தன. இதனால், சுற்றுலா போலீசார் ரோந்து சென்று கடலில் இறங்கி நின்ற சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தி கடலில் குளிக்க தடை விதித்தனர்.

படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story