நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 11 May 2017 10:30 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் நகரில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

நாகர்கோவில்,

நாகர்கோவில் நகரில் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் முன்பு சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து நாகர்கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார்.

அதன்படி நகர அமைப்பு அதிகாரி (பொறுப்பு) கெவின்ஜாய் மற்றும் அதிகாரிகள் கோர்ட்டு ரோடு, டதி பள்ளி சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், வடசேரி, கே.பி. ரோடு, டென்னிசன் ரோடு, கோட்டார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளின் பொருட்களை உடனே அகற்ற சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஜே.சி.பி. எந்திரம் மூலம்...

அந்த வகையில் கோர்ட்டு ரோட்டில் ஒரு காய்கறி கடை, டதி பெண்கள் பள்ளி சந்திப்பில் ஒரு கடை மற்றும் அண்ணா பஸ் நிலையத்தில் 7 கடைகளில் சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்கள் அகற்றப்பட்டது. சில கடைகளில் பெயர் பலகை ரோட்டில் வைக்கப்பட்டிருந்தது. மேலும், கடையின் மேற்கூரையும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது.

இந்த ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. நாகர்கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story