கோடநாடு பங்களாவை படம்பிடிக்க மர்ம நபர்கள் குட்டி விமானத்தை பறக்க விட்டார்களா? புதிய சோதனை சாவடி அமைப்பு– போலீசார் தீவிர கண்காணிப்பு
கோடநாடு எஸ்டேட் பங்களாவை படம் பிடிக்க மர்ம நபர்கள் குட்டி விமானத்தை பறக்க விட்டார்களா? என்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த மாதம் 24–ந்தேதி இரவு 11 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடிக்க புகுந்தனர். அவர்களை தடுத்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தனர். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரை தாக்கினர். அதில் அவர் மயங்கி விழுந்தார். இதனை தொடர்ந்து அந்த கும்பல் பங்களா கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
தலை மறைவுஇந்த கொலை–கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதுவரை அந்த கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் டிரைவர் விபத்தில் இறந்துவிட்டார். அவரது கூட்டாளி சயன் கார் விபத்தில் சிக்கி கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜிஜின் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குட்டி விமானம் பறந்தது–பரபரப்புஇந்த நிலையில் நேற்று முன்தினம் கோடநாடு எஸ்டேட் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிடுவதாக வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் பகுதியில் குறிப்பாக அங்குள்ள பங்களாவுக்கு மேல் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்ட ஒரு குட்டி விமானம் பறந்துள்ளது. அதில் பொருத்தப்பட்ட கேமரா மூலம் மர்ம நபர்கள் பங்களாவை படம் எடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது. அந்த விமானம் அங்கு வட்டமடித்து விட்டு சிறிது நேரத்தில் மறைந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து கோடநாடு எஸ்டேட் பகுதியில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுவதற்கு தனிப்படை போலீசார் முடிவு செய்தனர்.
புதிய சோதனை சாவடிஇதன் அடிப்படையில் கோடநாடு எஸ்டேட்டில் உள்ள 8, 9, 10–வது நுழைவு வாயில்களில் காவலாளிகள் பாதுகாப்புக்கு நின்றிருந்தாலும், போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக போடப்பட்டு உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இது தவிர கோடநாடு எஸ்டேட்டில் கேரடா மட்டம் என்ற இடத்தில் புதிய சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நேற்று போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கோடநாடு காட்சி முனைக்கு வருகின்ற வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டபின்னரே அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
இது போன்ற சம்பவங்கள் குறித்து நேற்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கூறியதாவது:–
குட்டி விமானம்கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலையில் தலைமறைவாக உள்ள ஒருவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் பல்வேறு இடங்களுக்கு பிரிந்து சென்று அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோடநாடு எஸ்டேட்டில் ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானம் பறப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது அவ்வாறு குட்டி விமானம் எதுவும் தென்படவில்லை.
எனினும் பத்திரிகையாளர்கள் சிலர், செய்தி சேகரிக்க, படம் எடுக்க கேமரா இணைத்துள்ள ரிமோட் குட்டி விமானத்தை பறக்க விட முயற்சித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் மத்திய அரசு அதிகாரிகள் யாரும் கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு மேற்கொள்ள வில்லை. இதுதொடர்பாக வரும் தகவல்களில் உண்மை தன்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.