நெலாக்கோட்டை அருகே வீட்டை இடித்து தள்ளி காட்டு யானை அட்டகாசம் தப்பி ஓடும்போது தலையில் அடிபட்டு 2 பேர் படுகாயம்
நெலாக்கோட்டை அருகே வீட்டை இடித்து தள்ளி காட்டுயானை அட்டகாசம் செய்தது.
பந்தலூர்
பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை அருகே விலங்கூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டு யானைகள், சிறுத்தை என வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்கள் பீதி அடைய வைத்து வருகிறது. மேலும் குடியிருப்புகளை காட்டு யானைகள் முற்றுகையிட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்தது.
பின்னர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி பிரபாகரன் என்பவரின் வீட்டை முற்றுகையிட்டது. சிறிது நேரத்தில் காட்டு யானை முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து செல்ல முயற்சித்தது. ஆனால் முடிய வில்லை. இதனால் வீட்டை இடித்து தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்போது வீட்டில் இருந்த பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் அலறினர். பின்னர் பின்பக்க வாசல் வழியாக அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
தலையில் அடிபட்டு 2 பேர் படுகாயம்அப்போது மண் வீடு என்பதால் பின்பக்க கதவில் உள்ள கம்புகள் பெயர்ந்து பிரபாகரன் (45) அவரது மகன் பிரவீண் (15) ஆகியோரின் தலையில் சரிந்து விழுந்தது. இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் காட்டு யானையிடம் இருந்து பிரபாகரன் குடும்பத்தினர் உயிர் தப்பினர். பின்னர் படுகாயம் அடைந்த பிரபாகரன், பிரவீண் ஆகியோர் சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே காட்டு யானை அங்கிருந்து சென்றது. இது குறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த வீட்டை சீரமைக்க நஷ்ட ஈடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பிரபாகரன், பிரவீன் ஆகியோருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கழிப்பறை கட்டிடத்தை இடித்ததுஇதுபோல கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கழிப்பறை கட்டிடத்தை ஒரு காட்டுயானை முற்றுகையிட்டது. பின்னர் சிறிது நேரத்தில் கழிப்பறை கட்டிட வளாகத்துக்குள் காட்டு யானை செல்ல முயன்றது. ஆனால் சுற்றுச்சுவர் இருந்ததால் காட்டு யானையால் உள்ளே செல்ல முடிய வில்லை. இதனால் கழிப்பறை சுற்றுச்சுவரை தனது காலால் காட்டு யானை எட்டி உதைத்தது. இதில் சுவர் உடைந்து விழுந்தது. பின்னர் வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் துதிக்கையை காட்டு யானை நுழைத்து தண்ணீர் குடித்தது. அப்போது கழிப்பறை கட்டிடத்தில் உள்ள மற்றொரு அறையில் தங்கி இருந்த காவலாளி மனோஜ் என்பவர் முதுமலை வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் யாரும் வர வில்லை என கூறப்படுகிறது. இதனால் பல மணி நேரம் காட்டு யானை அப்பகுதியில் நின்றிருந்தது. பின்னர் விடியற்காலையில் அங்கிருந்து சென்றது.