122 எம்.எல்.ஏ.க்களும் ஒரே அணியாக இருக்கிறோம்: அ.தி.மு.க அணியில் பிளவு இல்லை தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி
அ.தி.மு.க. (அம்மா) அணியில் பிளவு இல்லை, 122 எம்.எல்.ஏ.க்களும் ஒரே அணியாகத்தான் இருக்கிறோம்
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கன்னியபிள்ளைப்பட்டி கிராமத்தில் கடந்த 2–ந்தேதி மின்னல் தாக்கி அதே பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் பலியானார். இதையொட்டி அவருடைய வீட்டிற்கு ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரத்தை உதவித்தொகையாக வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வழிவகை இல்லைபொதுவாக இயற்கை இடர்பாடுகளான வெள்ளம், மண்சரிவு, நிலநடுக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும். ஆனால் மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு இயற்கை இடர்பாடு நிவாரண நிதி திட்டத்தில் நிவாரணம் வழங்க வழிவகை இல்லை. இருந்தாலும் மின்னல் தாக்கி இறந்தவரின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று, முதல்–அமைச்சரிடம் பரிந்துரை செய்து அவர்களுக்கும் நிவாரணம் பெற்றுத் தரப்படும்.
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவதற்கான முயற்சிகள் நடைபெறும் நிலையில், டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக பேரவை தொடங்கப்படுவது அவர்களின் சொந்த விருப்பம் ஆகும். டி.டி.வி.தினகரன் நல்ல மனம் படைத்தவர். அதனால் அவர் மீது உள்ள ஈடுபாடு காரணமாக பேரவையை தொடங்கி இருக்கலாம். இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. அவர்கள் அனைத்து நிபந்தனைகளையும் நிராகரித்துவிட்டு பெருந்தன்மையோடு பேசி இணைந்தால் நல்லது, வரவேற்போம்.
ஒரே அணியில்தற்போது வரை அ.தி.மு.க. (அம்மா) அணியில் 122 எம்.எல்.ஏக்கள் இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிளவும் கிடையாது. நட்பு ரீதியான காரணத்தினாலேயே நாங்கள் டெல்லிக்கு சென்று டி.டி.வி.தினகரனை சந்தித்துவிட்டு வந்தோம்.
கட்சியில் யாரையும் ஒதுக்கி வைக்க முடியாது. உங்களுக்குள் பிரச்சினை இல்லை என்றால் நல்லமுறையில் ஆட்சியை நடத்துங்கள் என்று கூறி டி.டி.வி.தினகரன் பெருந்தன்மையோடு ஒதுங்கிவிட்டார். இதை அனைவரும் வரவேற்க வேண்டும்.
பொய் வழக்குடி.டி.வி.தினகரன் மீது போடப்பட்ட பொய்வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் தள்ளுபடி செய்யப்படும். இருந்த போதிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் எங்கள் பணி. அதன்படி தற்போது படிப்படியாக மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மதுவிலக்கு என்ற இலக்கு எட்டப்படும். கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலிலதா அறிவித்த அனைத்து திட்டங்களும் மீதமுள்ள 4 ஆண்டுகளில் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். விரைவில் இதற்கான அறிவிப்பை முதல்–அமைச்சர் வெளியிடுவார்.
இவ்வாறு தங்கதமிழ்செல்வன் எம்.எல்.ஏ கூறினார்.