அவினாசியில், விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான வாழை சாகுபடி கருத்தரங்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தொடங்கி வைத்தார்


அவினாசியில், விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான வாழை சாகுபடி கருத்தரங்கு கலெக்டர் எஸ்.ஜெயந்தி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 May 2017 4:15 AM IST (Updated: 11 May 2017 10:49 PM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான வாழை சாகுபடிக்கான 2 நாள் கருத்தரங்கை திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தொடங்கிவைத்தார்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கான 2 நாள், வாழை சாகுபடி கருத்தரங்கினை மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு வகையான திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டமும் ஒன்று. சராசரியாக நமது மாவட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 3ஆயிரம் எக்டர் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பலவிதமான பழப்பயிர்களில் முக்கனிகளில் 3–வதாக திகழும் வாழை பயிர் சாகுபடியை பரவலாக நீர் வசதி உள்ள விவசாயிகள் மட்டும் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் வாழை சாகுபடிக்கு அதிக நீர் செலுத்துவதும் மண்வளம் அறியாது உரம் இடுவதும், தரமான கன்றுகளை தேர்வு செய்யாமல் இருப்பதும், குறைந்த மகசூலுக்கு காரணமாக அமைகின்றது. வாழையில் பலவித ரகங்கள் இருந்தாலும் திட்டமிட்டு திசு வாழை கன்றுகளை நடுவதே சிறந்தது. அவினாசி வட்டாரத்தில் சராசரியாக ஆண்டுதோறும் 2 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பில் சிறு விவசாயிகள் அதிகம் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

திசு வாழை கன்றுகள்

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு எக்டருக்கு ரூ.37 ஆயிரத்து 500 மதிப்புள்ள திசு வாழை கன்றுகள் மானியமாக வழங்கப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் இப்பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக அரசின் முக்கிய அங்கமான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலமாக பலவித ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாழை சாகுபடியாளர்களுக்கு தொழில் நுட்பங்களை ஒன்று சேர கிடைப்பதற்காகவே இவ்வாழை சாகுபடி கருத்தரங்கு இங்கு நடைபெறுகிறது. இங்கு திரளாக வந்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் உரையை கவனமாக கேட்டு பயன்பெற வேண்டும். கருத்துக்காட்சிகளில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை குறித்துக்கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.


Next Story