அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.
திருச்செந்தூர்,
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்று சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசினார்.
அமைச்சர் ஆய்வுதிருச்செந்தூர் டி.பி. ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அங்கு பணியாற்றும் ஊழியர்கள், அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக அரசு சுற்றுலா துறையில் பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது. இதனால் சுற்றுலா துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. திருச்செந்தூருக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருச்செந்தூரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் சுற்றுலா துறை சார்பில், விருந்தினர் மாளிகை கட்டுவது குறித்து முதல்– அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மேலும் இங்கு கூடுதல் விடுதிகள், திருமண மண்டபம் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும்.
இணைய வேண்டும்புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, முன்னாள் முதல்– அமைச்சர் ஜெயலலிதாவால் ராணுவ கட்டுப்பாடோடு பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க. ஆகும். இதில் சிறு பிளவு ஏற்பட்டாலும் கட்சிக்கு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைய வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். இதுவே 1½ கோடி தொண்டர்களின் விருப்பம் ஆகும். இதனை இரு அணிகளின் மூத்த தலைவர்களும் உணர்ந்து நல்ல முடிவுக்கு வர வேண்டும். இனி வருகிற எந்த தேர்தலாக இருந்தாலும், நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், சுற்றுலா துறை மண்டல மேலாளர் சுகுமாறன், சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் சீனிவாசன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் குமரேசன், உதவி செயற்பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், கணேசன், ரத்தினவேல், பால், முன்னாள் கவுன்சிலர் வடிவேல், ராஜா நேரு, கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் மணல்மேடு முருகேசன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.