சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்


சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 12 May 2017 4:00 AM IST (Updated: 12 May 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துவந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி நடுத்தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், முருகன் உள்பட பரிவார தெய்வங்கள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் காளியம்மனுக்கு மஞ்சள், சந்தனம், களபம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 7 மணி அளவில் காளியம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீடுகளில் மாவிளக்கு, தேங்காய், வாழை பழம் வைத்து காளியம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

அரியலூர்

இதேபோல் அரியலூரில் உள்ள ஒப்பில்லாத அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் பால் குடம் எடுத்து சத்திரம், மேல அக்ரகாரம், பொன்னுசாமி அரண்மனைதெரு வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு வாணவேடிக்கையுடன் மேள தாளம் முழங்க அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் மேல குடியிருப்பு பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் பூங்கரகம், பால் குடம், காவடி எடுத்து ஊர்வலமாக மேலகுடி யிருப்பு,திருச்சி சாலை வழியாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் ஜெயங்கொண்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகமிட்டியினர் செய் திருந்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூரில் உள்ள அமிர்தவள்ளி சமேத அமிர்தகடேசுவரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அமிர்தவள்ளி சமேத அமிர்தகடேசுவரர் சாமிக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஒகளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Tags :
Next Story