கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் குளத்தை தூர்வாரிய மு.க.ஸ்டாலின்


கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் குளத்தை தூர்வாரிய மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 May 2017 3:30 AM IST (Updated: 12 May 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் குளத்தை தூர்வாரிய மு.க.ஸ்டாலின், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க தொடர்ந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்டு, மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்து மாரியம்மன் கோவில் குளத்தை மு.க.ஸ்டாலின் தூர்வாரும் பணியில் நேற்று ஈடுபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்திலே ஏற்பட்டிருக்கக்கூடிய குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, நான் இரண்டு நாட்களுக்கு முன்பு சைதாப்பேட்டையில் ஒரு கோவில் குளத்தை தூர்வாரிய நேரத்தில், அதை மையமாக வைத்து ஒரு நீண்ட அறிக்கையை தி.மு.க. தொண்டர்களுக்கும், தி.மு.க. அமைப்புகளுக்கும் வேண்டுகோளாக எடுத்து வைத்திருந்தேன்.

அதனடிப்படையில் இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய குளம், குட்டைகள், ஏரிகள் போன்றவற்றை தி.மு.க. சார்பில் ஆங்காங்கு இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளில் மாவட்ட கழகம், ஒன்றியக் கழகம், நகர கழகம், பேரூர் கழக நிர்வாகிகள், இளைஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில், குளம் குட்டைகளை தூர்வாரக்கூடிய பணி தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறுவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

கவலைப்படவில்லை

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தவரையில், குடிநீர் பிரச்சினையைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. தண்ணீர் தட்டுப்பாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் அவர்கள் சிந்தித்து பார்க்கவில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எத்தனையோ முறை மழை பொய்த்திருக்கிறது, குடிநீர் தட்டுப்பாடு வந்திருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால், குளம் குட்டைகளை எல்லாம் முன்கூட்டியே தூர்வாரி தண்ணீரை சேமிக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை அன்றைக்கு தி.மு.க. அரசு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

மக்கள் பணி தொடரும்

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை கொண்டு வந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக்காலத்தில்தான் அதை நிறைவேற்றித் தந்துள்ளோம். அதேபோல, வேலூர் மாவட்டத்தில் வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தினை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். இப்படி, பல கூட்டுக்குடிநீர் திட்டங்களை தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி இருக்கிறோம்.

ஆனால், இப்போது நடைபெறும் ஆட்சியில் எந்தவொரு கூட்டுக்குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதற்கான முயற்சிகளிலும் இதுவரை ஈடுபடவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தி.மு.க. மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க நம்மால் என்னென்ன உதவிகளை செய்திட முடியுமோ அதையெல்லாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இது தொடரும்.

பா.ஜ.க.

விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற அக்கறை கொண்ட ஒரே கட்சி தி.மு.க. மட்டுமே. எனவே, விவசாயிகள் நடத்த இருக்கிற போராட்டத்துக்கு தி.மு.க. நிச்சயம் பக்கபலமாக இருக்கும்.

திராவிட இயக்கங்களை ஒழிப்பதுதான் எங்களுடைய முதல் வேலை என்று பா.ஜ.க. தலைவர்கள் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இப்படி சொல்பவர்களை அழைத்து வந்து கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சி மேடையில் உட்கார வைத்து, மற்றவர்களுக்கோ, அவர்களுக்கோ தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த நாங்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story