குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் - அதிகாரிகள் சிறைபிடிப்பு


குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் - அதிகாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 12 May 2017 4:30 AM IST (Updated: 12 May 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

தொடர்ந்து நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை சிறை பிடித்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கடும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு, அரசு காலனி, மெயின்ரோடு, மேட்டுத்தெரு, ஸ்டேட் வங்கி காலனி, கொல்லாங்குளம், போலீஸ் குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி நேற்று காலை 8 மணிக்கு காலி குடங்களுடன் மெயின்ரோட்டுக்கு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

போக்குவரத்து பாதிப்பு

மாநகராட்சி 40-வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான முத்துச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேலுச்சாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதனால் திருச்சி- மதுரை மெயின்ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டி புதூர் போலீசார் அங்கு விரைந்து வந்து கலைந்து போகும்படி கூறினார்கள். இதற்கு போராட்டம் நடத்திய பொதுமக்கள் மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

அதிகாரிகள் சிறைபிடிப்பு

இதனை தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையர் பிரபாகர், உதவி நிர்வாக பொறியாளர் கண்ணன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் கிரீஸ்குமார் ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது மறியல் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளை சிறை பிடித்தனர். காலை 9 மணிக்கு மறியலை கைவிட்டு அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும், பிராட்டியூர், சாத்தனூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆழ் குழாய் கிணறுகளை சீரமைக்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் முழு அளவில் தண்ணீர் நிரப்புவதற்கு வசதியாக ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யவேண்டும், கூட்டு குடிநீர் திட்டத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மாநகராட்சியிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளை சுற்றி அமர்ந்து இருந்தனர்.

வாக்குறுதி

இதனால் அதிகாரிகளை அந்த இடத்தை விட்டு மதியம் ஒரு மணி வரை நகர முடியவில்லை. அதன் பின்னர் குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் அங்கு வந்து ஜெனரேட்டர் மூலம் நீர் ஏற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற கோரிக்கைகளை 2 மாதத்தில் நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்ட அதிகாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர். சாலை மறியல் போராட்டம் மற்றும் அதிகாரிகள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story