காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 5 படகுகள் தீயில் எரிந்து சாம்பல்


காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 5 படகுகள் தீயில் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 12 May 2017 4:45 AM IST (Updated: 12 May 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 3 விசை படகுகள் உள்பட 5 படகுகள் தீயில் எரிந்து சாம்பலானது.

ராயபுரம்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான விசை படகுகள், பைபர் படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தினமும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வார்கள். தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளதால் மீனவர்கள், தங்களின் விசை படகு மற்றும் பைபர் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்து உள்ளனர்.

மீன்பிடி தடைகாலங்களில்தான் அவர்கள், படகுகளில் உள்ள பழுதுகளை நீக்குவது, மீன்பிடி வலைகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.

5 படகுகள் சாம்பல்

நேற்று மதியம் வழக்கம் போல் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பைபர் படகு ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்தது. கடற்கரை காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த மற்றொரு பைபர் படகு மற்றும் அதற்கு அருகில் நிறுத்தி இருந்த 3 விசை படகுகளுக்கும் தீ பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் படகுகளில் எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனாலும் தீ விபத்தில் ராயபுரம் நாகூரார்குப்பம் பகுதியை சேர்ந்த மணி, ராஜா, வள்ளி ஆகியோருக்கு சொந்தமான 3 விசை படகுகள் உள்பட 5 படகுகள் தீயில் எரிந்து சாம்பலானது.

காரணம் என்ன?

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் வழக்குப்பதிவு செய்து டீசல் கசிவு காரணமாக படகுகள் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது யாராவது வேண்டும் என்றே படகுகளை தீ வைத்து எரித்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Next Story